நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்: பீகார் அரசின் பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்..!!

தினகரன்  தினகரன்
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்: பீகார் அரசின் பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்..!!

டெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பீகார் அரசின் பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேரில் ஆஜராகி பீகார் அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக கூறினார். இதனிடையே சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான மற்றொரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங், மும்பையில் வழக்கை விசாரித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரி கொரோனாவின் பெயரில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது வழக்கின் ஆதாரங்களை அழிக்கத்தான் என்று வாதிட்டார். ஆகவே சுஷாந்த் சிங் கொலை குறித்து விசாரிக்கும் பீகார் காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு மும்பை காவல்துறைக்கு உத்தரவிடும் படி, அவர் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற சூழலில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையை பீகாரில் இருந்து மும்பைக்கு மாற்ற வேண்டி அவரது காதலி  ரியா சக்ரபோர்த்தி தாக்கல் செய்திருக்கும் மனு மீதும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு விசாரணையில் மராட்டிய போலீசாருடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என பீகார் அரசு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை