விலகியது சீன நிறுவனம் * புது ‘ஸ்பான்சர்’ தேடும் ஐ.பி.எல்., | ஆகஸ்ட் 04, 2020

தினமலர்  தினமலர்
விலகியது சீன நிறுவனம் * புது ‘ஸ்பான்சர்’ தேடும் ஐ.பி.எல்., | ஆகஸ்ட் 04, 2020

புதுடில்லி: கடும் எதிர்ப்பு காரணமாக ஐ.பி.எல்., தொடரில் இருந்து இந்த ஆண்டு மட்டும் சீன நிறுவனம் வெளியேறியதாக தெரிகிறது. பி.சி.சி.ஐ., சார்பில் புதிய ‘டைட்டில்’ ஸ்பான்சர் தேடப்பட்டு தேடுகிறது 

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் செப். 19–நவ. 10ல் நடக்கவுள்ளது. சென்னை, மும்பை உட்பட 8 அணிகளின் வீரர்கள் யு.ஏ.இ., செல்ல தயாராகி வருகின்றனர். தொடரின் ‘டைட்டில்’ ஸ்பான்சராக சீன நிறுவனம் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து வந்தது. சமீபத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் சீனா பொருட்கள், நிறுவனங்களுக்கு இந்தியாவில் எதிர்ப்பு எழுந்தது. இவைகளை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகின்றன.

60க்கும் மேற்பட்ட சீன செயலிகள், சமூக வலைத்தளங்களை இந்திய அரசு தடை செய்தது. கடந்த 2017 முதல் ஐ.பி.எல்., தொடரின் ‘டைட்டில்’ ஸ்பான்சராக இருக்கும் சீன நிறுவனத்துக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டுடன் (பி.சி.சி.ஐ), சீன நிறுவனம் பேசியது. பின், இந்த ஆண்டு மட்டும் தடை விதிக்கப்பட்டதாக நினைத்து, சுமூகமாக விலகிக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இரு நாட்டு உறவு வரும் ஆண்டில் மேம்படும் பட்சத்தில் 2021–23ல் மீண்டும் ஸ்பான்சராக தொடரலாம் என அந்நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

திடீர் சிக்கல்

தொடர் துவங்க 46 நாட்களே உள்ள நிலையில் தற்போது சீன நிறுவனம் விலகியதால் அணி உரிமையாளர்கள், மற்ற ஸ்பான்சர்கள் சோகத்தில் உள்ளனர். இதனால் இந்த ஆண்டுக்கு மட்டும் புதிய நிறுவனத்தை பி.சி.சி.ஐ., தேடி வருகிறது. 

பெயர் தெரிவிக்க விரும்பாத பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷாவுடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் பேசியது உண்மை தான். இந்த ஆண்டு ‘டைட்டில்’ ஸ்பான்சராக சீன நிறுவனம் இருக்க வாய்ப்பில்லை. இது உணர்வு பூர்வமான பிரச்னை என்பதால், எச்சரிக்கையாக அணுக வேண்டும்,’’ என்றார். 

 

தனிமையில் மும்பை வீரர்கள்

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் மும்பை அணி வீரர்கள், மும்பை வரத் துவங்கி விட்டனர். இதற்கு முன் இரு முறை கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மும்பை வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அப்போது மூன்ற முறை கொரோனா சோதனை நடத்தப்படும். மற்ற நேரங்களில் வீரர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து வசதிகளும் அவர்களுக்கு செய்து தரப்படுகின்றன. 

 

ஐந்து நாட்களுக்கு ஒருமுறை

வீரர்களுக்கான சோதனை முறை குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ யு.ஏ.இ., மண்ணில் இறங்கியதும் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா சோதனையில் மூன்று முறை தேறினால், உயர்பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவர். அன்னிய வீரர்கள் தங்கள் மண்ணில் இருந்து கிளம்பும் முன் இருமுறை சோதனை செய்ய வேண்டும். ஒருவேளை ‘பாசிட்டிவ்’ என வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, அடுத்த கட்ட சோதனையில் தேறியதும் யு.ஏ.இ., வரலாம். போட்டிகளின் போது ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒருமுறையும் சோதனை நடத்தப்படும் ,’’ என்றார்.

 

குடும்பத்தினருக்கு அனுமதியா

வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. அதேநேரம், இவர்கள் வெளிநபர்கள் யாரையும் சந்திக்க அனுமதி கிடையாது. மற்ற வீரர்கள், குடும்பத்தினரை சந்திக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ‘மாஸ்க்’ கட்டாயம் அணிய வேண்டும். பயிற்சிகள், போட்டிகள் நடக்கும் பகுதிகளில் குடும்பத்தினர் செல்லக் கூடாது. இதை மீறினால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். 6,7 வது நாளில் நடக்கும் சோதனையில் தேறினால், மீண்டும் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் வருவர்.


ரூ. 440 கோடி

சீன நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 440 கோடி கொடுத்தது. தற்போது கொரோனா காரணமாக பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. ஐ.பி.எல்., தொடரும் அன்னிய மண்ணில் நடக்கவுள்ளது. ரசிகர்களுக்கும் அனுமதி இல்லாததால், டிக்கெட் வருமானமும் கிடையாது. இந்நிலையில் ரூ. 440 கோடி கொடுத்து புதிய நிறுவனம் ஸ்பான்சராக வருமா என சந்தேகமாக உள்ளது.

மூலக்கதை