விலகல் முடிவில் மாற்றமில்லை: மிட்சல் ஸ்டார்க் உறுதி | ஆகஸ்ட் 04, 2020

தினமலர்  தினமலர்
விலகல் முடிவில் மாற்றமில்லை: மிட்சல் ஸ்டார்க் உறுதி | ஆகஸ்ட் 04, 2020

மெல்போர்ன்: ‘‘ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவில் எவ்வித மாற்றமும் கிடையாது,’’ என, மிட்சல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 30. சொந்த மண்ணில் நடக்க இருந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இவர், 13வது ஐ.பி.எல்., சீசனில் இருந்து விலகினார். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்விரு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டன.

இதுகுறித்து ஸ்டார்க் கூறியது: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பது என்பது அற்புதமான விஷயம் என்று தெரியும். இத்தொடர் வேறு தேதியில் நடத்தப்படுகிறது என்றாலும், என்னுடைய விலகல் முடிவில் மாற்றமில்லை. அனைவரும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் போது, சர்வதேச போட்டிக்கு தயாராவேன்.

அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., நடக்கும். அப்போது இத்தொடரில் விளையாட வேண்டும் என்று எனக்கு தோன்றினாலோ அல்லது நான் பங்கேற்க வேண்டும் என்று மற்றவர்கள் விரும்பினாலோ, தற்போதுள்ள எனது முடிவை மாற்றிக் கொள்வேன். ஆனால் இந்த ஆண்டு நான் பங்கேற்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் இம்முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது.

இவ்வாறு ஸ்டார்க் கூறினார்.

மூலக்கதை