ராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு?: இலங்கையின் 16-வது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: நாளை வாக்கு எண்ணிக்கை.!!!

தினகரன்  தினகரன்
ராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு?: இலங்கையின் 16வது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: நாளை வாக்கு எண்ணிக்கை.!!!

கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இலங்கையில் கடந்த மார்ச் 2ம் தேதி அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி  தேர்தல் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஜூன் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. எனினும், கொரோனா பரவுதல் குறையாத நிலையில் தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை  தொடர்ந்து இலங்கையில் மொத்தமுள்ள 225 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனிடையே, இலங்கை நாடாளுமன்ற  தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. வழக்கமாக மாலை 4 மணியுடன் தேர்தல் முடியும் நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 5 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 55 % வாக்குகள்  பதிவாகியுள்ளன. தொடர்ந்து, பதிவான வாக்குச்சாவடிகளை பாதுகாக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடக்கும் 16வது நாடாளுமன்ற தேர்தல் இது. இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான 225  எம்பிக்களில் 196 பேரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். மொத்தம் 7,452 பேர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம்முறை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா, ரணில்  விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் சக்தி என மும்முனை போட்டி உள்ளது. இதில் ராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக  உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை