இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் வழக்கு: நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் 3 ஆலோசகர்களை நியமித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் வழக்கு: நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் 3 ஆலோசகர்களை நியமித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நடவடிக்கை

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் 3 ஆலோசகர்களை நியமித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ்(49), கடந்த 2017ம் ஆண்டு ஈரான் சென்றிருந்தார். அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், தீவிரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் குற்றம் சுமத்தியது. அவருக்கு இந்திய தூதரக உதவிகள் கிடைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதில், வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரகம் அணுக பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் குவாவி அகமது யூசப் தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வியன்னா விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியுள்ளது. குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் நிறுத்தி வைக்க வேண்டும். அவருக்கு இந்தியாவின் தூதரக உதவிகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும். குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பாகிஸ்தான் கட்டாயம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், என உத்தரவிட்டது. மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து ஜாதவை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஜாதவ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவருக்காக வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்கக்கோரி, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு கடந்த 22ம் தேதியன்று மனுதாக்கல் செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாதவ் வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் ஆலோசகர்களாக 3 மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகள் நியமித்தனர். அதுமட்டுமல்லாது, வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் வழக்கறிஞர் ஒரு பாகிஸ்தான் நாட்டவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதோடு வழக்கை அதிக நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு செப்டம்பர் 3ம் தேதி மாற்றுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

மூலக்கதை