பெய்ரூட்டில் குடோனில் சேமித்து வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து 78 பேர் உடல் சிதறி பலி: 3,700க்கும் மேற்பட்டோர் படுகாயம்; அவசரநிலை பிரகடனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெய்ரூட்டில் குடோனில் சேமித்து வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து 78 பேர் உடல் சிதறி பலி: 3,700க்கும் மேற்பட்டோர் படுகாயம்; அவசரநிலை பிரகடனம்

பெய்ரூட்: லெபனான் நாட்டு தலைநகர் பெய்ரூட்டில், கப்பலில் கைப்பற்றப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் நடந்த வெடிவிபத்தில் இதுவரை 78 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். 3,700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கு மற்றும் நகர்ப் பகுதியில் நேற்று பிற்பகலில் 15 நிமிட இடைவெளியில் இரு பயங்கர வெடிவிபத்து நடந்தது.

மிகப்பெரிய அளவில் தீ மற்றும் புகை எழுந்தது. உயரமான கட்டிடங்களில் இருந்து கண்ணாடிகள் உடைந்து சரிந்தன.



பெரும்பான்மையான வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. அப்பகுதியில் இருந்த மக்கள் காயமடைந்து உடல் முழுவதும் ரத்தம் வடிய அலறிக் கொண்டு வீதிகளில் தலைதெறிக்க ஓடினர்.

இந்த சம்பவம் தொடர்பான நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அங்கு நடந்த சம்பவத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தின.

வெடியின் தாக்கம் 15 கி. மீ தொலைவுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. பெய்ரூட் நகரில் உள்ள மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தீவிர மீட்பு பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து, 234 கி. . மீ.

தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை நேற்று மாலை வரை 30 என்ற நிலையில், இன்றைய தகவல்களின்படி 78க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.

அதே நேரத்தில் 3,700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தால், இன்று அந்நாட்டில் துக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

2 வாரத்திற்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லெபனானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளது.

வணிக நிறுவனங்கள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. வறுமை, வேலையின்மை போன்ற ஆபத்தான நிலையில் மக்கள் உள்ளனர்.



தற்போதைய இந்த சம்பவம் அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து லெபனான் பிரதமர் ஹசன் டயப் கூறுகையில், ‘வெடிவிபத்துக்கு காரணமான நபரைக் கண்டுபிடிக்கும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்.

அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை பெற்றுத் தருவேன். இந்த வெடிவிபத்து சம்பவம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

துறைமுகப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம். கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட பல டன் எடையுள்ள வெடிபொருட்கள் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது.



விவசாய உரத்திற்கு பயன்படுத்தும் அமோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது. இந்த சம்பவம் நடந்த கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அமோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தாமல் வைத்திருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாதது.

தொடர் விசாரணை நடக்கிறது’ என்றார்.

அமைதி படைக்கும் காயம்
லெபனானில் உள்ள ஐ. நா அமைதி காக்கும் பணியில் (யுனிபில்) ஈடுபட்ட பணியாளர்கள், கப்பல்களில் தங்கியிருந்தனர். துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தால் யுனிபில் கடற்படை அமைதி காக்கும் படையினர் சிலர் காயமடைந்தனர்.

அவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ‘இந்த கடினமான நேரத்தில் லெபனான் மக்களுடனும், அரசாங்கத்துடனும் இருக்கிறோம்.

எந்தவொரு உதவிகளையும் ஆதரவையும் வழங்க தயாராக உள்ளோம்’ என்று யுனிபில் படைத் தளபதி ஜெனரல் டெல் கோல் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு உதவி
உலக சுகாதார அமைப்பு லெபனானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தோரை காக்க, மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகளை அனுப்புகிறது. இதுதொடர்பாக அதன் செய்தித் தொடர்பாளர் இனாஸ் ஹமாம் கூறுகையில், ‘குண்டுவெடிப்பு நடந்த உடனேயே சுகாதார அமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையில், காயமடைந்த 500 பேருக்கு சிகிச்சையளிக்க போதுமான அவசர மருத்துவ பொருட்கள் மற்றும் உயர்ரக நவீன கருவிகளை உலக சுகாதார அமைப்பு அனுப்பியது.

அறுவை சிகிச்சை தேவைப்படும் 500 பேருக்கு சிகிச்சையளிக்க தேவையான பொருட்கள் கொண்ட அறுவை சிகிச்சை கருவிகளும் அனுப்பப்படுகிறது’ என்றார்.

தீ விபத்து காரணமா?
வெடி விபத்து நடந்த கட்டிடத்தின் அருகே 3 மணி நேரத்திற்கு முன்னதாக தீ விபத்து ஒன்று நடந்துள்ளது. அந்த தீயை அணைக்கும் பணியில் இருந்தவர்கள், தற்போதைய வெடிவிபத்து நடந்த பின்னர் மாயமாகியுள்ளனர்.

அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இருந்தும் அவர்கள் வெடி விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நீடிக்கிறது.

விபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சில கி. மீ தூரங்களுக்கு பரவிய சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

2005ல் லெபனான் பிரதமர் பலி
2005ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் லெபனான் பிரதமர் ரபிக் ஹரிரி கொல்லப்பட்டார்.

பெய்ரூட்டில் நடந்த இந்த சம்பவத்தில் 21 பேர் பலியாகினர். இவ்விவகாரம் தொடர்பாக ஷியைட் முஸ்லீம் இயக்கமான ஹிஸ்புல்லாவின் நான்கு உறுப்பினர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது. தற்போதைய சம்பவம் குறித்து படுகாயமடைந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘பூகம்பம் ஏற்பட்டது போல் இருந்தது.

2005ல் ரபிக் ஹரிரி படுகொலையில் நடந்த குண்டு வெடிப்பை விட மிகப்பெரியது. ஒட்டுமொத்த நாடே நிலைகுலைந்துள்ளது’ என்றார்.



ஜெர்மன் தூதரக ஊழியர்கள் காயம்
இந்த சம்பவத்தில் தங்களது தூதரக ஊழியர்கள் காயமடைந்ததாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. அதில், ‘பெய்ரூட்டில் இருந்து வந்த புகைப்படங்களை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

எங்கள் தூதரகத்தில் உள்ள சக ஊழியர்களும் காயமடைந்தவர்களில் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எங்களது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் ஜெர்மனி, லெபனானுடன் உறுதியாக நிற்கும்’ என்று தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்கள் 33,000 பேரில்  2 பேர் வெடி விபத்தில் சிக்கி பலியானதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்
இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் ஆதரவை லெபனானுக்கு வழங்கி வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், லெபனான் வெடிவிபத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், ‘லெபனானில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்து அரசு, எங்களது ஆதரவை வழங்க தயாராக உள்ளது’ என்றார்.

இதற்கிடையில் இந்திய பிரதமர் மோடி, எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல் சிசி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் அனஸ்தாசியேட்ஸ்,  பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் உள்ளிட்ட தலைவர்கள் லெபனான் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை