‛ஏர்செல்- மேக்சிஸ்'வழக்கு: 3 மாதத்திற்குள் முடிக்க அவகாசம்

தினமலர்  தினமலர்
‛ஏர்செல் மேக்சிஸ்வழக்கு: 3 மாதத்திற்குள் முடிக்க அவகாசம்

புதுடில்லி : முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதான, 'ஏர்செல் -- மேக்சிஸ்' வழக்கு விசாரணையை முடிக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு, டில்லி நீதிமன்றம், மூன்று மாதம் அவகாசம் அளித்துள்ளது.

காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மத்திய நிதி அமைச்சராக, சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூரை சேர்ந்த, 'மேக்சிஸ்' மற்றும் தமிழகத்தை சேர்ந்த 'ஏர்செல்' நிறுவனங்களுக்கு இடையே, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், அன்னிய முதலீடு பெறப்பட்டதில், விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், சிதம்பரத்தின் மகன், கார்த்தி உதவியுடன், அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தில் முறைகேடாக அனுமதி பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. ஐரோப்பிய நாடான, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த அதிகாரிகளிடம், இந்த வழக்கு தொடர்பாக, சில தகவல்கள் கேட்டு, விசாரணை நிறுவனங்கள், கடிதம் அனுப்பியுள்ளன. இதுவரை, தகவல்கள் கிடைக்காத நிலையில், விசாரணையை முடிக்க, கால அவகாசம் தேவை' என, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சார்பில், டில்லி நீதிமன்றத்தில், நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை முடிக்க, மூன்று மாதங்கள் அவகாசம் அளித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு, வரும், நவம்பர், 3க்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை