காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஓராண்டில் மிகப் பெரிய மாற்றம்

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஓராண்டில் மிகப் பெரிய மாற்றம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு, கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 5ல், நீக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக, மாநிலம் பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இன்றுடன் ஓராண்டு முடிய உள்ள நிலையில், நிறைய பலன்கள் கிடைத்துள்ளது, தெளிவாக தெரிகிறது.

அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதேபோல், அரசியல் சாசனத்தின், 35 ஏ பிரிவானது, நிரந்தர குடியுரிமை வழங்குவது தொடர்பாகவும், சில சிறப்பு உரிமைகள், சலுகைகள் அளிப்பதாகவும் இருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு, கடந்த ஆண்டு, இந்த இரு சட்டப் பிரிவுகளையும் நீக்கி நடவடிக்கை எடுத்தது. மேலும், மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த சட்டப் பிரிவுகள் நீக்கத்தால், கடந்த ஓராண்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:

மத்திய சட்டங்கள் அமல்:

இந்திய அரசியல் சாசனம் மற்றும் அதில் செய்யப்பட்டுள்ள அனைத்து திருத்தங்களும், ஜம்மு - காஷ்மீருக்கும் பொருந்தும். தற்போது, அங்கு, 170 மத்திய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, மக்களுக்கு பல்வேறு பலன்களை அளிக்கக் கூடிய, முற்போக்கு சட்டங்களான, கல்வி உரிமை சட்டம், பெற்றோர் மற்றும் மூத்தோரை பராமரிக்கும் சட்டம், சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் சட்டம், பெண்கள் - குழந்தைகள் - ஊனமுற்றோருக்கான உரிமைகள், நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு வழங்குதல் என, பல பலனளிக்கும் சட்டங்கள், ஜம்மு - காஷ்மீர் முழுதும் அமலுக்கு வந்துள்ளன.

பாகுபாடுகள் நீக்கம்:

இந்த இரு சட்டப் பிரிவுகள் முடிவுக்கு வந்ததால், சமமான, நேர்மையான, அதிகாரம் அளிக்கக் கூடிய புதிய விடியல் ஏற்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு வெளியே உள்ளவரை மணந்தால், பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது என்பது நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாலின பேதமும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், வால்மீகி, கூர்க்கா, தலித்துகள் போன்ற பின்தங்கியோருக்கு எதிரான பாகுபாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சலுகைகள் முடிவு:

முன்னாள் முதல்வர்கள், முன்னாள், எம்.எல்.ஏ.,க்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் படிகள் வழங்கும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பலனளித்த சட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இருப்பிட உரிமை:

ஜம்மு - காஷ்மீரில் உள்ள, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, மேற்கு பாகிஸ்தான் அகதிகளுக்கு, இதுவரை மறுக்கப்பட்டிருந்த இருப்பிட உரிமை கிடைத்துள்ளது. இந்தியக் குடியுரிமை கிடைத்ததுடன், ஒரு குடும்பத்துக்கு, தலா, 5.5 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

துாய்மை பணியாளர்களுக்கு குடியுரிமை:

குடியுரிமை, கல்வி, வேலைகளில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த, 10 ஆயிரம், 'சபாய் கர்மசாரி' எனப்படும் துாய்மை பணியாளர்களுக்கு உரிமைகள் மற்றும் சலுகைகள் கிடைத்துள்ளன.

அரசு நியமனத்தில் பாகுபாடு நீக்கம்:

அரசு நியமனங்களில், இருப்பிட உரிமை என்பது அடிப்படை தகுதியாகும். தற்போது இருப்பிடச் சான்று அளிப்பது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை இருப்பிட சான்று கிடைக்காதவர்களுக்கும் தற்போது கிடைத்து வருகிறது. அதனால், அரசு பணிகளில் சேருவதற்கு பலருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 'ஆன்லைன்' மூலமாகவும் இந்தச் சான்று வழங்கப்படுவது, பிரச்னைகளுக்கு பெரிய தீர்வாக அமைந்துள்ளது.

வேலைவாய்ப்புகள்:

அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தீவிரம் காட்டப்பட்டது. முதல் கட்டத்தில், 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அடுத்ததாக, 25 ஆயிரம் பேர் சேர்க்கப்பட உள்ளனர். டாக்டர்கள், கால்நடை டாக்டர்கள், பஞ்சாயத்து கணக்கு அதிகாரிகள் என, பல நிலைகளில் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

திறன் மேம்பாடு:

திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தியோர் என, 15 - 30 வயதுடைய, ஒரு லட்சம் பேர், பலனடைய உள்ளனர்.

அரசு வேலை சுலபம்:

அரசு வேலை நியமனத்துக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், பதவி உயர்வுக்கான காலமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகமானோருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு விதிகள் மாற்றியமைப்பு:

சமூகத்தில் பின்தங்கியுள்ளோருக்கு இதுவரை கிடைக்காத அல்லது முறையாக கிடைக்காமல் இருந்த வாய்ப்புகளை தரும் வகையில், இடஒதுக்கீட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மிக நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது. இதைத் தவிர, சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளோருக்கு, இட ஒதுக்கீடுகள் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

நலத் திட்டங்கள்:

காஷ்மீர் அகதிகள் நலனுக்காக பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, 6,000 பணியிடங்களில், 4 ஆயிரம் நிரப்பப்பட்டுள்ளன. இதைத் தவிர, 1,000 அகதிகள் குடும்பத்துக்கு, 13 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் செய்யப்பட்டுள்ளது.

சம்பள கமிஷன் அமல்:

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள கமிஷன் பரிந்துரைகள், மூன்று லட்சம், ஜம்மு - காஷ்மீர் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. போலீஸ் துறையைச் சேர்ந்த, 84 ஆயிரம் பேரை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு படிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய சட்டங்கள் அமல்:

தகவல் அறியும் உரிமை சட்டம், ஜம்மு - காஷ்மீர் முழுவதற்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஊழல் கண்காணிப்பு, பொருளாதார குற்றத் தடுப்பு, சைபர் குற்றம் என, பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. ஜம்மு - காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, பிரதமர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. மேலும், இங்கு விளையும் ஆப்பிள்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை என, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

போராட்டங்கள் குறைந்தன:

ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்தின் உயரதிகாரிகள் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரிவினைவாத அமைப்பினர் மீது, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வளர்ச்சிக்கான திட்டங்களும் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இவற்றால், கடந்த ஓராண்டில், போராட்டங்கள் குறைந்துள்ளன. கல் வீசி தாக்கும் சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளன.

ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டால், உடனே, வேலை நிறுத்த போராட்டத்துக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுக்கும். தற்போது அதுபோன்ற, 'பந்த்' கிட்டத்தட்ட முற்றிலுமாக நின்றுவிட்டது. கடந்த, 2018ல், 532 கல் வீசி தாக்கும் சம்பவங்கள் நடந்தன. இது, 2019ல், 389ஆக இருந்தது. இந்த ஆண்டில், 102ஆக குறைந்துள்ளது. கல் வீசி தாக்கும் சம்பவங்கள், கடந்தாண்டில், 27 சதவீதம் குறைந்தது. அதுவே இந்த ஆண்டில், 73 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஊரடங்கு அமல்:

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இன்றுடன், ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், இதை கறுப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக, பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள் அறிவித்துள்ளன. அதையடுத்து, போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க, ஜம்மு - காஷ்மீரில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

மூலக்கதை