பணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம் 125 பேரை கொன்ற சைக்கோ டாக்டர்: உடல்களை முதலைகளுக்கு இரையாக்கிய கொடூரம்

தினகரன்  தினகரன்
பணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம் 125 பேரை கொன்ற சைக்கோ டாக்டர்: உடல்களை முதலைகளுக்கு இரையாக்கிய கொடூரம்

புதுடெல்லி: பணத்தின் மீதுள்ள ஆசை ஒருவரை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதற்கு ஒரு மோசமான உதாரணமாகி இருக்கிறான் தேவேந்திர சர்மா. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான தேவேந்திர சர்மா, மருத்துவப் படிப்பை முடித்த பிறகு ஜெய்ப்பூரில் தன் மருத்துவப் பணியைத் தொடங்கினான். 10 ஆண்டுகளிலேயே அந்தப் பகுதியின் கைராசி மருத்துவராகப் பேர் பெற்று, புகழுடன் பணத்தையும் சம்பாதித்தான். ஆனாலும், அந்த பணம் போதவில்லை. இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை. கேஸ் ஏஜென்சி தொடங்க முதலீடு செய்தான். அதில், நஷ்டம் ஏற்பட்டதால் குறுக்கு வழியில் யோசிக்க ஆரம்பித்தவன், நோயாளிகளின் சிறுநீரகத்தைத் திருடி விற்றுள்ளான். இந்த குற்றம் வெளியில் தெரிய வரவே 2004-ம் ஆண்டு கைதாகி பிறகு வெளியில் வந்துள்ளான். அடுத்து அவன் யோசித்ததுதான் கொடூரத்தின் உச்சம். அலிகருக்கு அருகில் இருந்த தலால்பூர்வாசிகளான ராஜ், உதய்வீர், வேத்வீர் ஆகியோர் உதவிடன் விபரீதமான திட்டத்தைத் தீட்டினான். சிலிண்டர்களுடன் வரும் லாரிகளை மறித்து சிலிண்டர்களைக் கொள்ளையடிப்பது, டிரைவர்களைக் கொலை செய்து ஆற்றில் வீசிவிடுவது என்று படுபாதகத்தை செய்து வந்துள்ளான். இதுபோல், பலநாள் திருடனாக சாமர்த்தியத்துடன் இருந்த தேவேந்திர சர்மா, ஒருநாள் மாட்டிக் கொண்டான். 16 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பரோலில் வெளிவந்தபோது தலைமறைவாகி விட்டான். தற்போது மீண்டும் தேவேந்திர சர்மாவை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் மீண்டும் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்களை கூறினான்.கடத்தப்பட்ட வாகனங்களை அடையாளம் தெரியாமல் பிரித்து தனித்தனியாக விற்றுவிடுவானாம். அதேபோல், முதலைகள் நிறைந்த ஆறு என்று கூறப்படும் உத்தரப் பிரதேசத்தின் ஹஜ்ரா நதியில் கொலை செய்த டிரைவர்களை வீசிவிடுவானாம். முதலைக்குத் தீனி போட்டுவிட்டால் போலீசுக்கு உடல் கிடைக்காது. தனித்தனியாகப் பிரித்து விற்றுவிட்டால் வாகனத்தையும் கண்டுபிடிக்க முடியாது என்று அவன் கூறியதைக் கேட்டு போலீசார் அரண்டு போயிருக்கிறார்கள். இதனடிப்படையில், அவன் 50 கொலைகளை செய்திருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும், உண்மையான கொலை எண்ணிக்கை 100 ஆக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடக்கிறது.

மூலக்கதை