சென்னையில் இதுவரை 1,900 மதிப்பீடு நிறைவு புதிய வரி மதிப்பீடு முறை துன்புறுத்தல்களுக்கு முடிவுகட்டும்: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் தகவல்

தினகரன்  தினகரன்
சென்னையில் இதுவரை 1,900 மதிப்பீடு நிறைவு புதிய வரி மதிப்பீடு முறை துன்புறுத்தல்களுக்கு முடிவுகட்டும்: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் தகவல்

சென்னை: ஆன்லைன் வரிமதிப்பீடு தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான முதன்மை தலைமை வருமான வரித்துறை ஆணையர் எம்.எல்.கர்மாகர் கூறியதாவது:முகமில்லா கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறையில் துன்புறுத்தல்கள் இருக்காது, இது அதிக வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்கும். வரிசெலுத்துவோர் மற்றும் வரி அலுவலர்களுக்கிடையேயான இடையீட்டை இந்தத் திட்டம் நீக்கியுள்ளது. வரி செலுத்துபவர்கள் வருமான வரி அலுவலகத்துக்கு நேரில் வர தேவையில்லை. வீட்டில் அமர்ந்தவாறே வருமான வரித் தகவல்களை சமர்ப்பிக்கலாம். சுதந்திரமான, நியாயமான, சரியான மதிப்பீடுகள் இனி இருக்கும். புதிய முறையின் கீழ் வாரத்துக்கு குறைந்தபட்சம் 5,000 மதிப்பீடுகளாவது செய்யப்படும், அக்டோபர் இறுதிக்குள் 58,000 மதிப்பீடுகள் செய்யப்படும். புதிய முறை வழக்குகளையும், சிக்கலை தீர்க்கும் கால அளவையும் குறைக்கும். முந்தைய முறையில், ஒரு வருமான வரி தாக்கல் அதே பிராந்தியத்தில் உள்ள அலுவலரிடம் செல்லும். புதிய முறையில் யாரிடம் செல்கிறது என்பதே தெரியாது என்றார். வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ஜகான்செப் அக்தர் கூறுகையில், முகமில்லா மதிப்பீட்டு முறையில் இதுவரை 8,000 தாக்கல்களை வருமான வரித் துறை மதிப்பீடு செய்து முடித்துள்ளதாகவும், சென்னை மையம் 1900 மதிப்பீடுகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை