சுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க நிதிஷ் பரிந்துரை மகாராஷ்டிரா-பீகார் மோதல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம்

தினகரன்  தினகரன்
சுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க நிதிஷ் பரிந்துரை மகாராஷ்டிராபீகார் மோதல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம்

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இடையேயான மோதலாக மாறியுள்ளது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி பாந்த்ராவில் தான் வசித்து வந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டை சேர்ந்த சில முக்கியமான பிரபலங்களின் நிர்பந்தம் காரணமாக தனக்கு வரவேண்டிய புதிய திரைப்பட வாய்ப்புகள் பறிபோனதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர்  தற்கொலை செய்தாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த தற்கொலை குறித்து பாலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரபர்த்தி, நடிகை சஞ்சனா சாங்கி, சுஷாந்தின் குடும்பத்தினர் உட்பட 56 பேரிடம் மும்பை போலீசார் இதுவரை விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, தனது மகனுடன் நடிகை ரியா ஓராண்டு காலம் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், சுஷாந்திடம் இருந்து ரூ.15 கோடியை ரியா அபகரித்து விட்டதாகவும், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று பாட்னா போலீசில் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் புகார் அளித்தார். அதன் பேரில் பாட்னா போலீசார் ரியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். பாட்னா போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மும்பைக்கு வந்து சுஷாந்த் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால், தங்களின் விசாரணைக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பாட்னா போலீசார் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிடுவதற்காக பாட்னா கிழக்கு நகர போலீஸ் கண்காணிப்பாளர் வினய் குமார் திவாரி கடந்த ஞாயிறன்று மும்பை வந்தார். வெளிமாநிலத்தில் இருந்து விமானத்தில் மும்பை வந்தவர் என்று கூறி போலீசாரின் உதவியுடன் அவரை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். கோரேகாவில் உள்ள ரிசர்வ் போலீஸ் படை முகாம் விருந்தினர் இல்லத்தில் வினய் குமார் திவாரி தங்கவைக்கப்பட்டுள்ளார். இதற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மகாராஷ்டிரா அரசு அரசியலாக்க வேண்டாம் என்று அவர் கண்டித்தார். இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க பரிந்துரைத்து பீகார் அரசு நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது. சுஷாந்த் சிங்கின் தந்தை கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தான் பரிந்துரைத்ததாக நிதிஷ் குமார் கூறியுள்ளார். இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அத்துடன், தனது கருத்தைக் கேட்காமல் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரி மகாராஷ்டிரா அரசு நேற்று அவசர அவசரமான உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து சுஷாந்த் தற்கொலை விவகாரம் மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு இடையேயான மோதலாக மாறியுள்ளது. சி.பி.ஐ. விசாரணை கோரும் பீகார் அரசின் முடிவுக்கு சிவசேனா மட்டுமல்லாது மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மூலக்கதை