'டிஜிட்டல்' மயம்! நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு

தினமலர்  தினமலர்
டிஜிட்டல் மயம்! நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு

திருப்பூர்:நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவடைந்துள்ளதால், விரைவில் 'டிஜிட்டல்' மயமாக்கப்பட உள்ளது.சொத்து கைமாறும் போது, பட்டா பெயர் மாறுதல் கோரி விண்ணப்பித்து, வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை பதிவேடுகளில் திருத்தம் செய்யப்படுகிறது. பதிவேடுகளாக மட்டுமே இருந்த இப்பணி, 2015ல், 'டிஜிட்டல்' மயமாகியுள்ளது.
முதல்கட்டமாக, அனைத்து வகை பட்டா நிலங்களும், டவுன் சர்வே நிலங்களும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, 'ஆன்லைன்' பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், புலவரைபடம் என, அனைத்து சேவையும், 'இ-சேவை' மையங்கள் மூலமாகவே கிடைக்கிறது.கிராமப்புறங்களில் சிட்டா, அடங்கல் புலவரைபடம் தேவையெனில், கிராம நிர்வாக அலுவலகத்தில், காகித வடிவிலேயே வழங்கப்படுகிறது. நத்தம் பட்டா மற்றும் 'அ' பதிவேடு விவரம், புல வரைபடம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி, 2018ல் நிறைவு பெற்றது.
இருப்பினும், நத்தம் விவரம் டிஜிட்டல் மயமாக்கப்படுவது கிடப்பில் போடப்பட்டது.புதிய 'சாப்ட்வேர்' வடிவமைக்கப்பட்டு, அனைத்து விவரமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், நத்தம் நில விவரமும் 'ஆன்லைன்' மூலம் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.நில அளவைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வருவாய்த்துறை சார்பில், நத்தம் நிலம் பயன்பாட்டுக்காக புதிய 'சாப்ட்வேர்' வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில், சிட்டா, அடங்கல் அல்லது தங்கள் நிலத்தின் வரைபடம் ஆகியவற்றை, 'இ-சேவை' மையங்களில் பெறலாம்,' என்றனர்.

மூலக்கதை