உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் தேங்கி வருவது அதிகரித்துள்ளது: வெங்கய்ய நாயுடு கவலை

தினகரன்  தினகரன்
உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் தேங்கி வருவது அதிகரித்துள்ளது: வெங்கய்ய நாயுடு கவலை

ஹைதராபாத்: உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் மலை போல் தேங்கி வருவது அதிகரித்துள்ளது குறித்து துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு கவலை தெரிவித்துள்ளார். நீதியை விரைந்தும், குறைந்த செலவிலும் வழங்க வேண்டியது அவசியம் எனக் கூறினார். நீண்ட காலத்துக்கு வழக்குகளை ஒத்தி வைப்பது குறித்து குறிப்பிட்ட அவர், நீதி இப்போது அதிகச் செலவு கொண்டதாக மாறி வருகிறது என்று கூறியதுடன் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற புகழ் பெற்ற பொன்மொழியைச் சுட்டிக்காட்டினார். ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார்.\r வழக்கறிஞர்கள் பெரும் சமூக மாற்றத்தை உருவாக்கும் திறமையுடையவர்கள் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், சமுதாயத்தைப் பொறுத்தே, சட்டங்களும் அமையும் என்றார். நீதி, நியாயம், சமத்துவம், கருணை, மனித நேயம் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் நமது சட்டங்களை ஆய்வு செய்து நிலையாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அத்துடன், நமது சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு முறைகளை தொடர்ந்து சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சட்டத் தொழிலை ஒரு இயக்கமாக இளம் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மிகவும் அதிகாரமற்ற, ஆதரவற்ற நமது மக்களுக்கு சேவை புரிய எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மூலக்கதை