வைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் கொதித்தெழுந்த கருப்பின ஆதரவாளர்கள்

தினமலர்  தினமலர்
வைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் கொதித்தெழுந்த கருப்பின ஆதரவாளர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மினியாபாலிஸ் நகரில் கள்ள நோட்டு அடித்து விற்பவரான ஜார்ஜ் பிளாய்டு நெடுங்காலமாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பின்னர் ஒரு நாள் அவர் டெரக் சாவின் உள்ளிட்ட 4 போலீசாரிடம் சிக்கினார். கருப்பினத்தவரான ஜார்ஜ் நான்கு போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். பின், காரின் அடியில் கைவிலங்கு மாட்டப்பட்டு படுக்க வைக்கப்பட்டார். அப்போது, அவரது கழுத்தில் டெரக் சா முஷ்டியை வைத்து தொடர்ந்து பல நிமிடங்கள் அழுத்தினார். இதில், ஜார்ஜ் உயிரிழந்தார். இதைத் தடுக்க முயன்ற பொதுமக்களை, மற்ற 3 போலீசாரும் அருகே நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டனர்.இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. ஜார்ஜ் உடல் கருப்பின மக்களின் இசை முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட நான்கு போலீசாரும் கைது செய்யப்பட்டனர். 'அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்' என, கருப்பின அமைப்பான 'பிளாக் லைப் மேட்டர்ஸ்' அமைப்பு போராடியது. தற்போது ஜார்ஜ் விவகாரம் சற்று ஓய்ந்து உள்ள நிலையில், அவர் இடம்பெற்றுள்ள புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


இந்த வீடியோவை பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஜார்ஜ் காவலர்களால் மடக்கப்பட்டு காரின் அடியில் கிடத்தப்பட்ட பின், காவலர் தாமஸ் லேன் ஜார்ஜை காப்பாற்ற முயன்ற பொதுமக்களை தடுப்பதில் மும்முரமாக இருந்தார். நான்கு போலீசாரது உடலிலும் பாடி கேமரா எனப்படும் சிறிய ரக கேமரா பொருத்தப்பட்டிருந்தது. தாமஸ் உடலில் பொருத்தப்பட்ட பாடி கேமராவில் ஜார்ஜ் தனது கடைசி நிமிடங்களில் அவதியுறுவது பதிவாகியுள்ளது.


இந்த வீடியோவில் 'காரின் அடியில் திணிக்கப்பட்ட ஜார்ஜ் தன்னால் மூச்சுவிட முடியவில்லை' எனக் கதறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காரணமாக உலகம் முழுவதும் அமைதியாக இருந்த கருப்பின ஆதரவாளர்கள் மீண்டும் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை