ஆனந்த மழை! நொய்யலில் புது வெள்ளம்: மகிழ்ச்சியில் நிரம்புது உள்ளம்!

தினமலர்  தினமலர்
ஆனந்த மழை! நொய்யலில் புது வெள்ளம்: மகிழ்ச்சியில் நிரம்புது உள்ளம்!

மேற்குத்தொடர்ச்சி மலையில், பெரியாறு, சின்னாறு, காஞ்சி மாநதி என சிறு சிறு ஆறுகள் உருவாகி, ஆலாந்துறை தொம்பிலிபாளையத்தில் ஒன்றாக இணைந்து, நொய்யலாக பிறப்பெடுக்கிறது. இம்மலைத்தொடரில், கடந்த ஒரு வாரமாக, கன மழை பெய்து வருவதால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சித்திரைச்சாவடி, குனியமுத்துார், குறிச்சி, வெள்ளலுார் அணைக்கட்டுகளில் இரு கரையையும் தொட்டுச் செல்லும் வகையில், தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. பேரூர் படித்துறையை கடந்து, நகர் பகுதிக்குள் உள்ள குளங்களுக்கும், குறிச்சி மற்றும் வெள்ளலுார் குளங்களுக்கும், தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.தடுத்த கட்டுமானப்பொருட்கள்நொய்யல் ஆற்றின் வழித்தடத்தில் உள்ள குளங்கள் மற்றும் வழித்தடங்கள், அணைக்கட்டுகளை சீரமைக்க, ரூ.230 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ளலுார் குளத்தில், கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.கட்டுமான பொருட்களை, குளத்துக்குள் வைத்திருந்தனர். தோண்டிய மண்ணை குவியலாக, கொட்டி வைத்திருந்தனர். இதன் காரணமாக, இக்குளத்துக்கு தண்ணீர் திருப்பி விட முடியாத சூழல் ஏற்பட்டது.மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு, இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை விடுத்து, கட்டுமான பொருட்களையும், தளவாடங்களையும் உடனே அகற்ற, பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தினர்.
இப்பிரச்னை காரணமாக, வெள்ளலுார் குளத்துக்கு குறைவாகவே தண்ணீர் செல்கிறது. அதே நேரம், நொய்யல் ஆற்றில், வினாடிக்கு, 1,500 முதல், 1,600 கன அடி வரை தண்ணீர் செல்கிறது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சித்திரைச்சாவடி அணைக்கட்டில், முழு கொள்ளளவு திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளலுார் குளத்தில், கட்டுமான பொருட்களை எடுத்துக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. மதியத்துக்கு பின், தண்ணீர் தேக்கப்படுகிறது' என்றனர்.
மழை காலத்தில் தவிர்ப்பது நலம்
குளங்கள் துார்வாருவது, அணைக்கட்டுகளை புதுப்பிப்பது, வழங்கு வாய்க்கால்களை சீரமைப்பது வரவேற்கத்தக்க விசயம். இப்பணிகளை மழைக்காலத்துக்கு முன் முடித்திருக்க வேண்டும். முடிக்க முடியாத இடங்களில், வேலையை சில மாதங்கள் தள்ளிப்போட்டு, மழை காலம் முடிந்த பின், மீண்டும் துவக்க வேண்டும்.
ஏனெனில், தற்போது மழை பெய்ய துவங்கியிருக்கிறது. மழைநீரை குளங்கள், குட்டைகளில் சேமிக்க வேண்டும். அதை தவிர்த்து, கட்டுமான பணியை காரணம் காட்டி, மழை நீரை சேமிக்காமல், ஆற்றில் விடக்கூடாது. இனி வரும் காலங்களில், மழையை கணக்கிட்டு, அதற்கு முன்னதாக, பணிகளை விரைந்து முடிக்க, பொதுப்பணித்துறையினர் திட்டமிட வேண்டும்.

மூலக்கதை