இழுபறி! கொரோனா நோயாளிகளுக்கு சித்தா சிகிச்சை அளிப்பதில்...முதல்வரின் உத்தரவு விரைவில் செயல்வடிவம் பெறுமா?

தினமலர்  தினமலர்
இழுபறி! கொரோனா நோயாளிகளுக்கு சித்தா சிகிச்சை அளிப்பதில்...முதல்வரின் உத்தரவு விரைவில் செயல்வடிவம் பெறுமா?

புதுச்சேரி : தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு அலோபதி மருந்துடன், சித்தா மருந்தும் வழங்கி கூட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் விருப்பத்திற்கேற்ப, தனியாக சித்தா சிகிச்சை அளிக்கவும் அரசு அனுமதி தந்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் இன்ஜினியரிங் கல்லுாரியில் சித்தா சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, சித்தா டாக்டர் வீரபாபு தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் அலோபதி சிகிச்சை அளிக்கப்படுகிறது; இன்னொரு பக்கம் சித்தா, ஆயுர்வேத சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு சித்தா சிகிச்சை அளிக்குமாறு, முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

புதுச்சேரி குழு பார்வை : முதல்வரின் உத்தரவை தொடர்ந்து, குயவர்பாளையத்தில் செயல்படும் மண்டல சித்தா மையத்தின் உதவி இயக்குனர் ராஜேந்திரகுமார், பல் மருத்துவக் கல்லுாரியின் மருந்து துறை தலைவர் ராஜரத்தினம், சித்த மருத்துவ நோடல் அதிகாரி ஸ்ரீதரன் ஆகியோர் சென்னைக்கு சென்று சாலிகிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தா சிகிச்சை மையத்தை பார்வையிட்டனர்.அங்கு, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வழங்கப்படும் சித்தா மருந்துகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். கொரோனா நோயாளிகள் குணமடைந்தது தொடர்பான புள்ளிவிபரங்களையும் சேகரித்தனர்.

புதுச்சேரி திரும்பிய மருத்துவக் குழுவினர் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சித்தா சிகிச்சை அளிப்பதற்கான செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டு ஒரு மாதமாகியும் சித்தா சிகிச்சை இன்னும் செயல்வடிவம் பெறாமல் உள்ளது.இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா பரவல் படுவேகம் எடுத்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை, 4,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தொற்று வேகமாக பரவி வருவதால், தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் அலோபதியுடன் சித்தா சேர்ந்த கூட்டு சிகிச்சை, தனித்த சித்தா சிகிச்சை போன்றவற்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை