அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு

அயோத்தி: அயோத்தியில் ராமர்கோயிலுக்கு நாளை அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழாவில் மோடியும் பங்கேற்பதால் உ. பி. யில் சிறப்புப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 161 அடி உயரத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் கோயில்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டது.

பூமி பூஜை விழாவிற்கான கவுரி விநாயகர் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக, வேத பண்டிதர்கள் மற்றும் அறக்கட்டளை  உறுப்பினர்கள் சிலரை தவிர வேறு யாரும் இந்த சடங்குகளில் பங்கேற்க  அனுமதிக்கப்படவில்லை.



இதைப்போல கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழாவுக்கு  அழைப்பாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை கோயில் கட்டுவதற்கான சிறப்பு பூமி பூஜை நிகழ்ச்சி  தொடங்கிய நிலையில், நாளை நடைபெற உள்ள கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில்  பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

விழா அழைப்பிதழில்  பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென்  பட்டேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளதால்  அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. மொத்தம் 175 சிறப்பு  விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

விழாவில், பாஜகவின்  மூத்த தலைவர்கள் எல். கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வீடியோ  கான்பரன்சிங் மூலம் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு  கொரோனா தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காக மூத்த தலைவர் உமா பாரதி  விழாவில் பங்கேற்கவில்லை. நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதலில் ஹனுமன்கரி கோயிலில் தரிசனம்  செய்கிறார்.

அதன்பிறகு பகல் 12. 30 மணியளவில் ராம ஜன்ம பூமியில் ராம்லல்லாவில் பூஜை செய்வார். அங்கு, ராம்லல்லா  விராஜ்மன் என்ற குழந்தை ராமர் வழிபாடு மற்றும் பூஜையில் பிரதமர் மோடி  பங்கேற்கிறார்.



அங்கு பாரிஜாதம் மரக்கன்று ஒன்றை நடுகின்ற பிரதமர் மோடி, பகல் 12. 30  மணிக்கு விழா நடைபெறும் இடத்தை சென்றடைகிறார். தொடர்ந்து பூமி பூஜை மற்றும் மேடையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அப்போது பிரதமர் 5 ரூபாய் தபால் தலையை வெளியிடுகிறார். பூமி பூஜை நடக்கும் நிகழ்ச்சியின் போது  மேடையில் பிரதமர் மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தபிரதேச  ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மஹந்த் நிருத்ய  கோபால்தாஸ் ஆகியோர் இருப்பார்கள்.

மொத்தம் 3 மணி நேரத்திற்கும்  மேலாக பிரதமர் மோடி, அயோத்தி ராமர்  கோயில் பூமி பூஜையில் பங்கேற்றுவிட்டு டெல்லி புறப்படுகிறார்.

விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பூமி பூஜைக்கான அழைப்பிதழில் பாதுகாப்பு கோடு அச்சிடப்பட்டுள்ளது. அழைப்பிதழுடன் விழாவுக்கு வருபவர்கள் வெளியே சென்றால் மீண்டும் உள்ளே வர இயலாத வகையில் பாதுகாப்பு கோடு (ஸ்வைப்) உள்ளது.

சிறப்பு விருந்தினர்களுக்கு வாகன பாஸ்கள் இல்லை. மின்னணு சாதனங்கள், மொபைல் போன் அல்லது கேமரா அனுமதி இல்லை.

அமவா கோயில் முன் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருந்தினர்கள் விழா இடத்தை அடைய சுமார் 250 படிகள் நடந்துதான் செல்ல வேண்டும்.

அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்க சிறப்பு பாதுகாப்பு படை, உள்ளூர் ேபாலீசார் உச்சகட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

90 வயதை கடந்த முக்கிய பிரமுகர்கள், அயோத்தி நகரை அடைவது சாத்தியம் இல்லை என்பதால், சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள்’ என தெரிவித்துள்ளது. மேலும் அயோத்தி விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மும்பை, டெல்லி, சென்னை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உளவுப் பிரிவு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

.

மூலக்கதை