கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ரமீஸ், தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக தங்கம் கடத்திய வழக்கில், சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து சுங்க இலாகா விசாரித்தது.

இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் சொப்னாவுடன் கேரளாவை சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.



கேரள அரசில் மிகவும் செல்வாக்கான இவர், ெசாப்னாவின் தங்கம் கடத்தலுக்கு பலமுறை உதவி செய்து இருக்கிறார். சொப்னா கைதாவதற்கு ஒருசில நாளுக்கு முன்புவரை அரசியல் பிரமுகர் பலமுறை அவரை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளார்.

இந்த விபரங்களை சுங்க இலாகாவினரின் விசாரணையின் போது சொப்னா கூறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று கொச்சியில் சுங்க இலாகா உயர் அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் சொப்னாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த, அரசியல் பிரமுகரிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி கடத்தல் தங்க கடத்தலில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த காரணத்தில்தான் என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

கடத்திய தங்கத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.

கைதாகி உள்ள ரமீஸ் தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் துபாயில் இருந்து ரமீஸ் கொச்சி வந்தார்.

அப்போது அவரது கைப்பையில் ஏராளமான துப்பாக்கிகளுக்கான பாகங்கள் இருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது துப்பாக்கி சுடும் பயற்சி நிறுவனத்துக்காக கொண்டு வரப்பட்ட ஏர்-கன்கள் என்று தெரிவித்தார்.

அதில் 6 துப்பாக்கிகள் உள்ளன என்று தெரிவித்தபோதும், மொத்தம் 13 துப்பாக்கிகளுக்கான பாகங்கள் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளின் தடயவியல் பரிசோதனை நேற்று சுங்க இலாகாவுக்கு கிடைத்தது.

இதில் அந்த 13 துப்பாக்கிகளும் ஏர்-கன் அல்ல எனவும், அவை ேதாட்டாக்களை வைத்து சுடும் நிஜ துப்பாக்கிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரமீஸ் தீவிரவாதிகளுக்காக துப்பாக்கிகளை கடத்தினாரா? இதற்குமுன்பும் இதுபோல துப்பாக்கிகளை கடத்தி வந்தாரா? என்பது குறித்தும் ரமீஸை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ, சுங்க இலாகா அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர்.

என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில்  கேஸ் டயரி தாக்கல்
கேரள தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பான கேஸ் டயரி இன்று கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் ஜாமீன் கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது ‘உபா’ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களையும், கேஸ் டயரியையும் தாக்கல் செய்ய வேண்டும் என என்ஐஏவுக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பான கேஸ் டயரியை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ இன்று தாக்கல் செய்தது.

இதில் கடத்தல் கும்பலுக்கு தீவிரவாதிகளுடன் உள்ள தொடர்பு குறித்தும், கடத்தி விற்கப்பட்ட தங்கம் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது குறித்தும் உரிய ஆவணங்களுடன் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சொப்னா மற்றும் சந்தீப் நாயர் இருவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வருகிறது. இதில் என்ஐஏ தாக்கல் செய்துள்ள கேஸ் டயரியை முழுமையாக பரிசீலித்த பின்னரே சொப்னா மற்றும் சந்தீப் நாயரின் ஜாமீன் மனு குறித்து நீதிபதி முடிவெடுப்பார்.

32 பக்க வாக்குமூலம்
சொப்னா, சந்தீப் நாயரை என்ஐஏ 14 நாட்களும், சுங்க இலாகா 5 நாட்களும் காவலில் எடுத்து விசாரித்தன.

நேற்று சுங்க இலாகாவினர் 32 பக்கங்கள் கொண்ட சொப்னாவின் வாக்குமூலத்தை எர்ணாகுளம் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதில் முக்கிய பிரமுகர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால் பிற்காலத்தில் வாக்குமூலத்தை மாற்ற சொப்னாவுக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், சுங்க இலாகா இதை நீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை