கொரோனா காலத்தில் முதியோர் உதவித்தொகை திட்டமிட்டப்படி வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்க!: மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

தினகரன்  தினகரன்
கொரோனா காலத்தில் முதியோர் உதவித்தொகை திட்டமிட்டப்படி வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்க!: மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் சூழலில் முதியோர் உதவித்தொகை திட்டமிட்டப்படி வழங்கப்படுகிறதா? என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சட்ட அமைச்சர் அஷ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தற்போதைய சூழலில் தனிமையில் உள்ள முதியோர்களின் நிலைமை குறித்து கவலை தெரிவித்திருந்தார்.  கொரோனா காலத்தில் முதியவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், முகக்கவசம், மருந்து, உதவித்தொகை உள்ளிட்டவை சரியான நேரத்தில் கிடைக்கிறதா? என்பதை மத்திய அரசு உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி அசோக் பூஷன், முதியோர் இல்லம் மற்றும் விடுதிகளில் தனிமையில் தங்கியுள்ள முதியோர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், முதியோர் உதவித்தொகை திட்டமிட்டப்படி வழங்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்யுமாறு மத்திய, மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை