கல்வி கொள்கையை ஏற்காதீங்க! திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்

தினமலர்  தினமலர்
கல்வி கொள்கையை ஏற்காதீங்க! திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்

சென்னை: 'தேசிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு முற்றிலும் ஏற்கக் கூடாது. தமிழ் கற்றல் சட்டம் தொடரும் என்று, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன். முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கூட்டாக, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு எழுதியுள்ள கடிதம்:

தேசிய கல்வி கொள்கை, மத்திய அரசுக்கு, மும்மொழி திட்டத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது. இரு மொழி கொள்கைக்கு விரோதமான, மும்மொழி திட்டத்தை திணிப்பது போன்றவற்றை, எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. தேசிய கல்வி கொள்கையை, தமிழக அரசு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

தமிழகத்தில், தமிழ் கற்றல் சட்டம் - 2006 தொடரும் என்று, அது தொடர்பாக, தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி


'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது: புதிய கல்வி கொள்கை என்ற பெயரால், மும்மொழி திட்டம் புகுத்தப்பட்டதை எதிர்த்துள்ள, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நன்றி. மத்திய அரசின் மொழி கொள்கை மட்டுமல்ல, கல்வி கொள்கையே, பல்வேறு தவறுகளை கொண்டது; மாணவர்களின் கல்வி உரிமையை பறிப்பது. இதை சுட்டிக்காட்டி, முதல்வர் இ.பி.எஸ்., தன் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை