முதல்வர் பதவி விலக வலியுறுத்தி காங்., 'ஆன்லைன்' போராட்டம்

தினமலர்  தினமலர்
முதல்வர் பதவி விலக வலியுறுத்தி காங்., ஆன்லைன் போராட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில், தங்கக் கடத்தல் பிரச்னைக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர், 'ஆன்லைன்' வாயிலாக, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கடந்த மாதம் நடைபெற்ற, 30 கிலோ தங்க கடத்தலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில், நேற்று 'ஆன்லைன்' வாயிலாக, அரைநாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்படி, காங்., தலைவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தபடி போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தை, கேரள மாநில காங்., பொது செயலர் பொறுப்பு வகிக்கும் முகுல் வாஸ்னிக் துவக்கி வைத்தார். எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, அவரது அலுவலகத்தில் இருந்தபடி போராட்டத்தில் பங்கேற்றதுடன், தங்க கடத்தல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை தேவை என, வலியுறுத்தினார்.

மாநில, காங்., தலைவர், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதுடன், 'ரா' பிரிவினரின் விசாரணைக்கு வலியுறுத்தினார். காலை, 9:30 மணிக்கு தொடங்கிய போராட்டம், மதியம், 1:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.

மூலக்கதை