கொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி

புதுடில்லி: 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம், மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி, முதற்கட்ட ஆய்வை முடித்ததை அடுத்து, அடுத்த இரு கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் அனுமதியை பெற்றுள்ளது.

பரிசோதனை:

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த, சீரம் நிறுவனம், உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள, 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது.

கடந்த மாதம், கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை, சீரம் பெற்றது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனை முடிவுகளை, மத்திய மருந்துகள் தரக் கட்டுப் பாட்டு கழகத்தைச் சேர்ந்த, வல்லுனர் குழு ஆய்வு செய்தது.

இத்துடன், ஆக்ஸ்போர்டு பல்கலை மேற்கொண்ட, முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. இதையடுத்து, சீரம் நிறுவனம், மனிதர்களிடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சீரம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, ஆக்ஸ்போர்டு பல்கலை கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி ஆய்வு செய்து வருகிறது. இதில், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன.

தடுப்பூசி:

பிரேசிலில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடக்கிறது. தென்னாப்ரிக்காவில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில், சீரம் நிறுவனம், இரண்டாம் கட்ட பரிசோதனையை துவக்க உள்ளது. இதில், ஒருவருக்கு, முதல் நாளன்று, கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்படும்.

அதன்பின், 29வது நாளில் இரண்டாவது முறை மருந்து செலுத்தப்படும். இடைப்பட்ட காலத்தில், அந்த நபரின் உடல்நிலை, நோய் எதிர்ப்பு தன்மை ஆகியவை ஆராயப்படும்.கடந்த வாரம், சீரம் நிறுவனம், புதிய செயல் திட்டத்திற்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்துள்ளது. அதில், 18 வயதுக்கு மேற்பட்ட, 1,600 பேரை ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஆய்விற்கு, இவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவர். இந்த ஆய்வு முடிவுகளுக்குப் பின், அக்டோபர் மாதம், கோவிஷீல்டு தயாரிப்பு துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை