இறக்குமதியில் கட்டுப்பாடு சீனாவுக்கு நெருக்கடி

தினமலர்  தினமலர்
இறக்குமதியில் கட்டுப்பாடு சீனாவுக்கு நெருக்கடி

புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதியில் மேலும் பல கட்டுப்பாடுகளை கொண்டு வர இருக்கிறது. குறிப்பாக, பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், மரச் சாமான்கள் உள்ளிட்டவற்றில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், சீனாவுக்கு மேலும் நெருக்கடியை தருவதாக இருக்கும்.

இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இறக்குமதியில் மேலும் பல கட்டுப்பாடு களை, அரசு விதிக்க இருக்கிறது. மரச் சாமான்கள், பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், குளிர்சாதன பெட்டிகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு உரிமம் தேவை என அறிவிக்க இருக்கிறது.இதன் மூலம், உள்நாட்டில் இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு, அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.மேலும், உள்நாட்டு தொழில் துறையை உயர்த்துவதற்காக கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்களை இறக்குமதி செய்வதற்கு, அரசு கடந்த மாத துவக்கத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், கிட்டத்தட்ட, 20 துறைகளை சார்ந்த பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் பட்சத்தில், அவற்றின் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தோல், காலணிகள், வேளாண் ரசாயனங்கள், சில உணவுப் பொருட்கள், உருக்கு, அலுமினியம், மின்சார வாகனங்கள், வாகன பாகங்கள், ‘டிவி’ செட்டாப் பாக்ஸ், எத்தனால், தாமிரம், ஜவுளி, ‘சிசிடிவி’ ஆகியவற்றின் இறக்குமதியிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இத்தகைய பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டால், அவை, சீன ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும். சீனாவிலிருந்து தான் இந்த பொருட்கள் பெருமளவு இறக்குமதி ஆகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை