தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து 4வது மாதமாக சரிவு

தினமலர்  தினமலர்
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து 4வது மாதமாக சரிவு

புதுடில்லி:தொடர்ந்து நான்காவது மாதமாக, கடந்த ஜூலை மாதத்திலும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி சரிவைக் கண்டு உள்ளது.

கொரோனா தொற்றால், நீண்ட நாட்களாக நாடு முடக்கப்பட்டதை அடுத்து, தேவைகள் குறைந்தது மற்றும் நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தது ஆகிய காரணங்களால் வளர்ச்சி குறைந்துள்ளது என, ஆய்வு தெரிவிக்கிறது.பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஜூலை மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேவை குறைவு

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தாண்டு ஜூலை மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, 46 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது ஜூனில், 47.2 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும். ஜூலை மாதத்தில், தொடர்ந்து நான்காவது மாதமாக சரிவு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் வளர்ச்சி குறைந்துள்ளது.


தேவைகள் குறைந்திருக்கும் நிலையில், இன்னும் பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன.மேலும், ஏற்றுமதி ஆர்டர்களும் சரிவைக் கண்டுள்ளன. தொற்று நோய் தாக்கம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாத நிலையில், சர்வதேச வாடிக்கை யாளர்கள் ஆர்டர்களை வழங்க தயங்குவதாக ஆய்வின்போது தெரிய வந்துள்ளது.


தேவைகள் குறைந்ததை அடுத்து, இந்திய உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். செலவை பொறுத்தவரை மூலப்பொருட்களின் விலை, ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.வட்டி விகிதம்வரும், 6ம் தேதி அன்று, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த வட்டி விகிதம், துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பல நிறுவனங்கள் இன்னும் செயல்பட துவங்காததால், ஆர்டர்கள் கிடைப்பதில் சிரமங்கள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. நோய் தொற்று விகிதம் குறைக்கப்படும் வரை, கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் வரை முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது.
எலியட் கெர்


பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்.

மூலக்கதை