மாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
மாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு

பீஜிங்; 'அமெரிக்காவில் பணியாற்றி வரும் சீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை, அந்நாட்டு அரசு கண்காணித்து, வேண்டுமென்றே கைது செய்து துன்புறுத்துகிறது' என, சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டி உள்ளது.


சீனாவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர், ஜுவான் டாங், 37. இவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள, புற்றுநோய் கதிர்வீச்சியல் துறையில், ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள, கடந்த ஆண்டு, டிசம்பர், 27ல், அமெரிக்கா வந்தார்.இவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில், அமெரிக்க எப்.பி.ஐ., போலீசார், கடந்த ஜூன், 20ல், சோதனை நடத்தினர். அப்போது, ஆராய்ச்சியாளர் ஜுவான் டாங், சீன ராணுவ உறுப்பினராக இருப்பதற்கான சில ஆதாரங்களை, போலீசார் கைப்பற்றினர். அவரது, பாஸ்போர்ட் மற்றும் விசாவையும் கைப்பற்றினர்.இதையடுத்து, கலிபோர்னியாவில் உள்ள, சீன துாதரகத்தில், ஜுவான் டாங், தஞ்சம் அடைந்தார். மருத்துவ பரிசோதனைக்காக வெளியே வந்த அவரை, கடந்த மாதம், 23ல், போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஜாமின் வழங்க, நீதிமன்றம் மறுத்துள்ளது.


ஜுவான் டாங்கை போலவே, மேலும் மூன்று ஆராய்ச்சியாளர்களை, அமெரிக்க போலீசார் ஏற்கனவே கைது செய்து உள்ளனர்.இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், வாங் வென்பின், கூறியதாவது:ஆராய்ச்சியாளர் ஜுவான் டாங்கை, அமெரிக்காவில் இருந்து தப்பிக்க வைக்க, சீன அரசு முயற்சிக்கவில்லை. இந்த வழக்கு, சட்டப்படி நியாயமாக நடத்தப்பட வேண்டும்.சமீப காலமாக, அமெரிக்காவில் வசிக்கும், சீன ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை, தொடர்ந்து கண்காணிப்பது, துன்புறுத்துவது, வேண்டுமென்றே கைது செய்வது போன்ற செயல்களில், அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.இந்த நடவடிக்கைகள், சீன பிரஜைகளின் சட்டப்படியான உரிமைகளை பாதிக்கிறது. இதன் மூலம், அமெரிக்கா - - சீனா இடையிலான உறவு பாதிப்புக்கு உள்ளாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை