திணறல்! தொற்று அதிகரிப்பதால் மாவட்ட நிர்வாகம்...வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படும் அவலம்

தினமலர்  தினமலர்
திணறல்! தொற்று அதிகரிப்பதால் மாவட்ட நிர்வாகம்...வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படும் அவலம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,பாதித்தவர்களை மருத்துவமனைகளில் தங்க வைக்க இடமின்றி வீட்டிலேயே தனிமைப்படுத்துவதால்,நோய் மேலும் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை பாதிப்பு எண்ணிக்கை 3,575 ஆக உயர்ந்துள்ளது. இது வரை விருத்தாசலம் தாசில்தார், நெல்லிக் குப்பம் டாக்டர் உள்ளிட்ட 47 பேர் இறந்துள்ளனர்.மாவட்டத்தில் பாதிப்பு அதிகரிப்பதால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சையளிப்பதிலும், பாதித்தவர்கள் வசித்த பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து கண்காணிப்பதிலும் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.

இடப்பற்றாக்குறை : மாவட்டத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, கடலுார், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி அரசு மருத்துவமனைகள், அண்ணாமலை பல்கலை விடுதிகள், மங்களூர், கடலுார் அரசு கல்லுாரி விடுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று எண்ணிக்கை நாள் தோறும் அதிகரிப்பதால், பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க போதுமான இட வசதி, படுக்கை வசதி, அழைத்து செல்ல வாகன வசதி உள்ளிட்ட பிரச்னை காரணமாக, நோய் பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஏற்கனவே நோய் பாதித்தவர்களை மட்டும் அழைத்துச் செல்கின்றனர்.மக்கள் அச்சம்நோய் பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப் படுத்துவதால், பல கிராமங்களில் மக்களுக்கு கொரோனா நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சிறிய வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இடங்களிலும் நோய் பாதித்தவரை தனிமைப் படுத்துவதால் அனைவருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் மாவட்டத்தில் பல கிராமங்களில் உள்ளது. சில இடங்களில் தொற்று பாதித்தவர்களும் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றுகின்றனர்.நோய் பாதித்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைப்பது, தடுப்புகள் அமைப்பது உள்ளிட்டவைகள் கூட தற்போது கடைபிடிப்பதில்லை. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரம், வருவாய்த் துறையினரும் பாதிப்பதால், நோய் பாதித்த பகுதிக்கு சென்றால் தங்களுக்கும் பாதிப்பு வரும் என அச்சமடைகின்றனர்.
எனவே, அலட்சியம் காட்டாமல், கூடுதலாக சிறப்பு முகாம்களை அமைத்து, நோய் பாதித்தவர்களை தங்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு தனிமையால், கிராமங்களில் தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து கடலுார் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வதும், கொரோனா பரிசோதனை மாதிரி எடுக்கும் நடைமுறையும் தளர்த்தப்பட்டுள்ளது.

கடலுார் - புதுச்சேரி சாலையில் சின்னகங்கணாங்குப்பத்தில் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுப்பட்டது. தற்போது அந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் மாவட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நெருக்கடியை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாவட்ட நிர்வாகம் தனது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

மூலக்கதை