அவலம் அவலம்!லேசான மழைக்கே குளமாகும் வீதிகள்...நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை

தினமலர்  தினமலர்
அவலம் அவலம்!லேசான மழைக்கே குளமாகும் வீதிகள்...நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை

புதுச்சேரி : மழைக் காலங்களில் புதுச்சேரி நகர வீதிகள் குளமாக மாறும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மழையும், மே, ஜூன் மாதங்களில் கோடைக்கால மழையும் பெய்வது வழக்கம். ஜூலையில் ஆரம்பித்து, செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவத்திலும், அக்டோபரில் துவங்கி, டிசம்பர் வரை தொடரும் வடகிழக்கு பருவத்திலும் அதிகளவு மழை பொழிவு இருக்கும்.தற்போது, தென்மேற்கு பருவ மழை துவங்கி விட்டது. கடந்த வாரம் 45 நிமிடங்கள் பெய்த மழைக்கே புதுச்சேரி நகர வீதிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அனைத்து வீதிகளிலும் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. புஸ்சி வீதி உள்ளிட்ட பிரதான வீதிகள் பலவற்றிலும் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தன.மழை நின்ற பின், தண்ணீர் வடிவதற்கு பல மணி நேரமானது. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் நன்றாக திட்டமிட்டு புதுச்சேரி நகரம் வடிவமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் நகரத்தின் வெளியில் இருந்து பெருக்கெடுக்கும் தண்ணீர் எந்த இடத்திலும் தேங்கி நிற்காமல் வெளியேறும் வகையில் பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால் போன்றவை அமைக்கப்பட்டன.

இந்த வாய்க்கால்களுக்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்களும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது, பல வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. மழை நீர் தங்கு தடையின்றி வழிந்தோடி கடலுக்கு செல்வதற்கு பல தடைகள் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் வீதிகளில் தண்ணீர் தேங்குவதும், வாய்க்கால்களை துார் வாரி சுத்தம் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. ஆனால், நிரந்தர தீர்வு இதுவரை ஏற்படவில்லை.

பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்து, மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை