கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்

தினகரன்  தினகரன்
கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்

டுரின்: சீரி ஏ தொடரில் சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட ஜுவென்டஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது. கொரோனா தொற்று பீதிக்கு இடையில் மீண்டும் தொடங்கிய இத்தாலி சீரி ஏ கால்பந்து போட்டி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்த ஜுவென்டஸ் அணி ஜூலை 27ம் தேதியே சாம்பியன் ஆகிவிட்டது. அதனால் எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் அசத்தலாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூலை 29ம் தேதி நடந்த போட்டியில் காக்லியாரி அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கடைசி போட்டியில் ரோமா அணியுடன்  மோதியது. அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த போட்டியில் பங்கேற்க வில்லை. சாம்பியன் லீக் தொடருக்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் பரிதாபமாக தோற்றது. எனினும், இந்த தோல்வியால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் ஜுவென்டஸ் வீரர்கள் உற்சாகமாகவே இருந்தனர். போட்டி நடைபெற்ற டுரின் அரங்கில் நடந்த விழாவில் ஜுவென்டஸ் அணிக்கு தொடர்ந்து 9வது முறையாக சிரீ ஏ சாம்பியன் கோப்பை அளிக்கப்பட்டது.

மூலக்கதை