கேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு சப்ளை: சென்னை வழியாகவும் கடத்தினார்களா?

தினகரன்  தினகரன்
கேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு சப்ளை: சென்னை வழியாகவும் கடத்தினார்களா?

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தலில் கிடைக்கும் பணம் காஷ்மீர் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகளுக்கு சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னை விமான நிலையம் வழியாகவும் சொப்னா கும்பல் தங்கம் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் என்ஐஏ அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக பார்சல் வழியாக திருவனந்தபுரத்துக்கு, சொப்னா கும்பல் தொடர்ந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வந்துள்ளது. இந்த தங்கம் தமிழகம், ஆந்திரா, கர்நாடக கும்பல்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதையடுத்து என்ஐஏ பல குழுக்களாக பிரிந்து விசாரித்து வருகிறது.அதன்படி சென்னை, திருச்சியில் கடந்த வாரம் என்ஐஏ தென்மண்டல டிஐஜி வந்தனா தலைமையிலான குழு அதிரடி விசாரணை நடத்தியது. கடத்தல் தங்கம் வாங்கும் நகை வியாபாரிகள், ஏஜென்டுகளை விசாரித்தது. விசாரணையில் 3  பேருக்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கடத்தல் கும்பலிடம் இருந்து இவர்கள் தங்கத்தை வாங்கி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தீவிரவாத கும்பலுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் கிடைக்கும் பணம் காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகளுக்கு சென்றுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை என்ஐஏ உறுதி செய்துள்ளது.இதனால் தமிழகத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்றும் சென்னை உள்பட பல பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைதான ரமீஸிடம் இருந்து கிடைத்த தகவல் படி கேரளாவை சேர்ந்த மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர். இதில் மூவாற்றுப்புழா பகுதியை சேர்ந்த முகமது அலி இப்ராஹிம், முகமது அலி ஆகியோருக்கும் தீவிரவாத கும்பலுடன் நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ரமீஸிடம் இருந்து தங்கத்தை வாங்கும் இவர்கள் அதை விற்று பணத்தை தீவிரவாத குழுக்களுக்கு சப்ளை செய்துள்ளனர். இது தவிர எர்ணாகுளம், மலப்புரத்தில் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் தங்கியிருந்த 6 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள், டேப்லெட், 8 செல்போன்கள், 6 சிம்கார்டுகள், 1 டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், 5 டிவிடிகளையும் கைப்பற்றி உள்ளனர்.இதுதவிர வங்கி கணக்கு புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், வெளிநாடுகளுக்கு சென்றுவந்த ஆவணங்கள், அடையாள அட்டைகள் உள்பட பலவற்றை என்ஐஏ கைப்பற்றி உள்ளது. திருவனந்தபுரம் மட்டுமல்லாது சொப்னா கும்பல் சென்னை விமான நிலையம் வழியாகவும் தங்கம் கடத்தி இருக்கலாம் என்று என்ஐஏ சந்தேகிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டில் சென்னை விமான நிலையம் வழியாக இவர்கள் பெருமளவில் தங்கத்தை கடத்தி இருக்கலாம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் 20.60 கிலோ தங்கமும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 20 கிலோ தங்கமும் பிடிபட்டது. முதல் சம்பவத்தில் சூளைமேட்டை சேர்ந்த 4 பேரும், 2வது சம்பவத்தில் 2 பெண்களும் சிக்கினர். இதன் பின்னணியிலும் சொப்னா கும்பல் இருக்கலாம்? என்ற தகவல் என்ஐஏவுக்கு கிடைத்துள்ளது. அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டில் சென்னை விமான நிலையம் வழியாக நடந்த கடத்தல் குறித்து என்ஐஏ தீவிரமாக விசாரித்து வருகிறது.* அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்புசொப்னா மற்றும் சந்தீப் நாயரை என்ஐஏ 14 நாட்ளும், சுங்க இலாகா 5 நாட்களும் காவலில் எடுத்து விசாரித்தன. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. தங்கம் கடத்தலுக்கு உதவிய முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறித்து சொப்னா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சுங்க இலாகா சொப்னாவின் வாக்குமூலத்தை எர்ணாகுளம் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திடீர் என்று தாக்கல் செய்துள்ளது. 32 பக்கங்கள் கொண்ட வாக்குமூலத்தை நேற்று மாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் முக்கிய பிரமுகர்கள் பெயர்களை கூறியுள்ளதால் பிற்காலத்தில் வாக்குமூலத்தை மாற்ற சொப்னாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால் இதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.* பல மோசடி மூலம் கோடிகள் குவிப்புசொப்னாவுக்கு திருவனந்தபுரம், கொச்சி உள்பட சில இடங்களில் வங்கி கணக்குகளும், ரகசிய லாக்கர்களும் இருந்துள்ளது. இதில் ஒரு லாக்கரை திறந்து பார்த்த போது ரூ.1 கோடிக்கும் மேல் பணம், 1 கிலோவுக்கும் மேல் நகைகளும் இருந்தன. சுங்க இலாகா விசாரணையில், இதில் தங்கம் கடத்தல் மூலம் கிடைத்த பணம் மட்டுமல்லாமல், சொப்னா மேலும் பல மோசடிகளை நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கேரளாவில் வெள்ளப்பெருக்கின்போது துபாயில் உள்ள சமூகநல அமைப்பு ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் முன்வந்தது. அதன்படி முதற்கட்டமாக ஒரு கோடி திர்காமை (ரூ.20 கோடி) ஒதுக்கியது. இந்த திட்டத்தை கேரளாவில் செயல்படுத்த சொப்னா இடைத்தரகராக இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் சொப்னாவுக்கு இதுபோன்ற திட்டங்களின் மூலம் குறைந்தது ரூ.1.85 லட்சம் டாலர் கிடைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த பணத்தை ரகசியமாக வைக்கவே சிவசங்கரின் ஆடிட்டர் மூலம் லாக்கர்களை அவர் எடுத்திருக்கலாம். எனவே சொப்னாவின் இந்த மோசடி குறித்து சிவசங்கருக்கும் தெரிந்திருக்கலாம் என என்ஐஏ கருதுகிறது.

மூலக்கதை