தெலங்கானா மாநிலத்தில் கோசாலையை அகற்றிய அதிகாரியை விடாமல் துரத்தும் பசு: காரை சுற்றி வருவதால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
தெலங்கானா மாநிலத்தில் கோசாலையை அகற்றிய அதிகாரியை விடாமல் துரத்தும் பசு: காரை சுற்றி வருவதால் பரபரப்பு

திருமலை: தெலங்கானாவில் கோசாலையை அகற்றிய அதிகாரியை பசு விடாமல்  செல்லும் இடங்களிலெல்லாம் சென்று துரத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு இடங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளை அகற்றிவிட்டால் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது வழக்கமானது தான். ஆனால், கோசாலையை அகற்றியதால் அந்த அதிகாரி காரை ஒரு பசு விடாமல் துரத்துவது வியக்க வைக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:தெலங்கானா மாநிலம், வனபர்த்தி பகுதியில் ஒரு அமைப்பு சார்பில் கோசாலை அமைக்கப்பட்டது. இங்கு ஏராளமான மாடுகள், கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோசாலை அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது. இது ஆக்கிரமிப்பு எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த மண்டல வருவாய் அலுவலர், கோசாலை ஆக்கிரமிப்புகளை கடந்த வாரம் அகற்றினார். இதனால், அங்கு பராமரிக்கப்பட்டு வந்த மாடுகள் இடமின்றி தவித்தது. இந்நிலையில், அங்கிருந்த ஒரு பசு, தனது இடத்தை இடித்து தள்ளிய மண்டல வருவாய் அதிகாரியின் வீட்டிற்கு சென்றது. வீட்டின் எதிரே தங்கியிருக்கும் இந்த பசு, அதிகாரி காரில் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து துரத்தியபடியே செல்கிறது. அவர், காரில் இருந்து இறங்க முயலும்போது கதவை திறக்க முடியாதபடி வந்து நிற்கிறது. சில நேரங்களில் காரின் குறுக்கே நின்று விடுகிறது. இதை யார் தடுத்தாலும் முடியவில்லை. இதை பார்க்கும் மக்கள் வியப்படைகின்றனர். அதிகாரியோ கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை