சமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விற்பனை ஜூலை மாதத்திலும் சரிந்தது

தினகரன்  தினகரன்
சமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விற்பனை ஜூலை மாதத்திலும் சரிந்தது

புதுடெல்லி: எரிபொருள் தேவை கடந்த ஜூலை மாதத்திலும் சரிவடைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறைகள் இயங்கவில்லை. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஊரடங்கு சில மாநிலங்களில் தளர்த்தப்பட்டபோதும், இயல்பு நிலை திரும்பவில்லை. இதன்காரணமாக எரிபொருள் தேவை வெகுவாக குறைந்துள்ளது. ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே பெட்ரோல், டீசல் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. இந்திய எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டுமொத்த எரிபொருள் விற்பனையில் டீசல் விற்பனை ஐந்தில் இரண்டு பகுதியாக உள்ளது. இதன் விற்பனை கடந்த ஜூலை மாதம், முந்தைய மாதத்தை விட 13 சதவீதம் சரிந்து 4.85 மில்லியன் டன்களாக மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் சரிந்துள்ளது என எண்ணெய் நிறுவன புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.இதுபோல், பெட்ரோல் விற்பனை ஜூன் மாதத்தை விட ஒரு சதவீதம் சரிந்து 2.03 மில்லியன் டன்களாக உள்ளது. முந்தைய ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு மட்டுமின்றி, வடமாநிலங்கள் சிலவற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையை பாதித்து விட்டதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், சமையல் காஸ் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் சமையல் காஸ் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து, 2.275 மில்லியன் டன்களாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் விற்பனை 3.5 சதவீதம் உயர்ந்துள்ளது. விமான பெட்ரோல் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் சரிந்துள்ளது.

மூலக்கதை