அறிவுப்பசியும்... வயிற்றுப்பசியும்! அரசுப்பள்ளிகளில் கிடைக்கிறது தீர்வு

தினமலர்  தினமலர்
அறிவுப்பசியும்... வயிற்றுப்பசியும்! அரசுப்பள்ளிகளில் கிடைக்கிறது தீர்வு

கோவை;அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பாடப்புத்தகம், புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வினியோகம் துவங்கியது.பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி தொலைக்காட்சி, கல்வி இணையதளம் வாயிலாக, மாணவர்களுக்கு பாடம் கையாளப்படுகிறது.
எந்தெந்த பாடங்கள் கையாளப்படும் என்பதை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பாடப்புத்தகங்கள் இல்லாமல், வகுப்பை கவனிப்பதில் சிக்கல் உள்ளதாக புகார் எழுந்தது. இதனால், நேற்று முதல் எட்டாம் வகுப்பு முதல் ஒன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சுழற்சி முறையில் பாடப்புத்தகங்கள், புத்தகப்பை வினியோகம் துவங்கப்பட்டுள்ளது.ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் வீதம், சமூக இடைவெளியை பின்பற்றி புத்தகங்கள் பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வேலை நாட்களிலும், புத்தகங்கள் வழங்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'பாடப்புத்தகம், புத்தகப்பை மற்றும் சத்துணவு உலர் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 3 ஆயிரத்து 100 கிராம் அரிசி மற்றும் ஆயிரத்து 200 கிராம் பருப்பு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 4 ஆயிரத்து 650 கிராம் அரிசி மற்றும் ஆயிரத்து 250 கிராம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.இதோடு, பிளஸ் 2 மாணவர்களில், கலை, தொழிற்கல்வி பிரிவிற்கு, சில பாடங்களுக்கு, இ-கன்டென்ட் பதிவிறக்கி, லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து தரப்பட்டுள்ளது' என்றனர்.

மூலக்கதை