தோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020

தினமலர்  தினமலர்
தோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க சென்னை வரவுள்ள தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா சோதனை நடக்கவுள்ளது.

இந்தியாவில் நடக்க இருந்த 13வது ஐ.பி.எல்., தொடர் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, மத்திய அரசின் அனுமதி கிடைத்ததை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) இத்தொடர் நடக்கவுள்ளது.

வரும் செப். 19–நவ. 10 என 53 நாட்களில் 60 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கு தயாராகும் வகையில் விரைவில் பயிற்சியை துவக்க, தோனி தலைமையிலான சென்னை அணி திட்டமிட்டு வருகிறது. முதல் அணியாக யு.ஏ.இ., செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அனைத்து வீரர்களும் சென்னை வரவுள்ளனர். இதற்கு முன் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்படும். இதில் தேறியதும், வீரர்கள் தனி விமானத்தில் யு.ஏ.இ., செல்லவுள்ளனர்.

இதுகுறித்து சென்னை அணி நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

ஐ.பி.எல்., கட்டுப்பாட்டு குழுவுடன் அணி உரிமையாளர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் எங்களது அனைத்து சந்தேகங்களும் தீரும் என நம்புகிறோம். மற்றபடி விதிமுறைகளை மீறுவது என்ற பேச்சிற்கே இடமில்லை.

எங்களைப் பொறுத்தவரையில் முதல் அணியாக பயிற்சிகளை துவக்கவும், யு.ஏ.இ., கிளம்பும் முன் இந்தியாவில் குறுகிய கால பயிற்சி முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஐ.பி.எல்., நிர்வாக முடிவுக்காக காத்திருக்கிறோம்.

தோனி மற்றும் அனைத்து வீரர்களுக்கும், சென்னை வரும் முன் கொரோனா சோதனை நடத்தப்படும். வீரர்கள் சென்னை வந்திறங்கிய 48 மணி நேரத்தில் யு.ஏ.இ., கிளம்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை