மது கடைகளை ஏன் மூடக்கூடாது: ஐகோர்ட்

தினமலர்  தினமலர்
மது கடைகளை ஏன் மூடக்கூடாது: ஐகோர்ட்

சென்னை: 'மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில், சமூக இடைவெளியை பின்பற்றுவதில் பிரச்னை என்றால், மது கடைகளையும் ஏன் மூடக்கூடாது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ஆர்.சுதா தாக்கல் செய்த மனுவில், 'ஊரடங்கால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு சாப்பிட்டு வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாணவர்களுக்கு, சத்தான உணவு வழங்கவும், 'அம்மா' உணவகத்தில் முட்டை உள்ளிட்ட சத்துணவு வழங்கவும், திட்டம் வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, சமூக நலத் துறை செயலர் மதுமதி தாக்கல் செய்த பதில் மனு: ரேஷன் பொருட்களுடன் முட்டை வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்தது. அழியக்கூடிய தன்மை உள்ளதால், பெற்றோர், குழந்தைகளை வரவழைத்து முட்டை வழங்க இயலாது. எனவே, மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவர்களுக்கு, அரிசி, பருப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி, முட்டை வழங்குவதில் நடைமுறை பிரச்னைகள் இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே நீதிபதிகள், 'சமூக இடைவெளி தான் முக்கிய பிரச்னை என்றால், மதுபான கடைகளையும் ஏன் மூடக்கூடாது?' என, கேள்வி எழுப்பினர்.

'ஊரடங்கு இருப்பதால், மாணவர்களுக்கு முட்டை வழங்கும் பணியில், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர்களை ஈடுபடுத்தலாமே' எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை இன்றைக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை