போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் உயிரிழப்பு...: ஆந்திராவில் மீண்டும் சோகம்

தினகரன்  தினகரன்
போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் உயிரிழப்பு...: ஆந்திராவில் மீண்டும் சோகம்

கடப்பா: ஆந்திராவில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால், நாட்டு மதுவகைகள் மற்றும் கள்ளச்சாராயம் போன்றவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த போலி மதுபானங்களின் பட்டியலில், தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சானிடைசர் திரவமும் இணைந்துள்ளது. அதில் இருக்கும் ஆல்கஹாலுக்காக இதை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிருமிநாசினி திரவத்துடன் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை சேர்த்து குடித்து போதை ஏற்றி வருகின்றனர். ஆந்திராவின் பல மாவட்டங்களில் இந்த பழக்கம் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரகாசம் மாவட்டத்தில் போதைக்காக கிருமிநாசினி திரவத்தை குடித்து 19 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மறைவதற்குள் தற்போது மேலும் 3 பேர் கிருமி நாசினி திரவம் குடித்து பலியாகியிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் சானிடைசரை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் தொடருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மூலக்கதை