20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று

தமிழ் முரசு  தமிழ் முரசு
20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை கடந்த நிலையில், பல மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவை தொடர்ந்து கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது மகளுக்கும் தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இன்று காலை  நிலவரபடி மொத்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,03,696 ஆகவும், இறந்தவர்களின்  எண்ணிக்கை 38,135 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52,972  பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டும், 771 பேர் இறந்தும்  உள்ளனர்.

உத்தரபிரதேச மாநில ஆளும் பாஜக அமைச்சராக இருந்த கமல்ராணி வருண், நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் பலியானார்.

அவரை தொடர்ந்து நாட்டின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரபலங்களின் கொரோனா தொற்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த வாரம், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரைச் சந்தித்த சில மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் தங்கள் வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சவுகான் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜகவின்  உத்தரபிரதேச பிரிவின் தலைவர் ஸ்வந்தந்திர தேவ் சிங் மற்றும் மாநில அமைச்சர்  மகேந்திர சிங் என பட்டியல் நீண்டு வருகிறது.



முன்னதாக கொரோனா அறிகுறிக்கு ஆளான அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை கொரோனா பரிசோதனை செய்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் நேற்றிரவு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கொரோனா வைரஸ் பாசிடிவ் இருப்பதாகவும், தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக  டுவிட் செய்துள்ளார்.


அதில், ‘நான் நன்றாக உள்ளேன். இருந்தும் ​​மருத்துவர்களின் பரிந்துரையின் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன், சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.



எடியூரப்பா அமைச்சரவையில் உள்ள வனத்துறை ஆனந்த் சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் சி. டி. ரவி மற்றும் வேளாண் அமைச்சர் பி. சி. பாட்டீல் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில அமைச்சர்கள் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வரின் மகள், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்று பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச பாஜக தலைவர் ஸ்வந்தந்திர தேவ் சிங், தனக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



உத்தரபிரதேச ஜல்சக்தி அமைச்சர் மகேந்திர சிங் மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, மாநில சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், ஊரக வளர்ச்சி அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங் அல்லது மோதி சிங், சைனிக் கல்யாண் அமைச்சர் சேதன் சவுகான், ஆயுஷ் அமைச்சர் தரம் சிங் சைனி மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சர் உபேந்திர திவாரி ஆகியோர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் கொரோனா நோய்த்தொற்று ‘பாசிடிவ்’  உறுதிசெய்யப்பட்டதால், அவரது வீட்டில் தனிமைப்படுத்த  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூலை 29 முதல் ராஜ் பவனில் பணியாற்றிய  மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை