கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்

திருமலை: கொரோனா வார்டில் தவிக்கும் நோயாளிகளை டாக்டரோ, நர்ஸ்களோ வந்து கவனிக்காத அவலம் ஆந்திர அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது. மேலும், குப்பை வண்டியில் கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அநியாயமும் நடக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் 1. 58 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

74 ஆயிரம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள நோயாளிகள் சிலர், சரியான சிகிச்சை கிடைக்கவில்லை எனக்கூறி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அங்கு சிகிச்சை பெறும் வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இம்மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உரிய சிகிச்சையின்றி சுமார் 1 மணி நேரமாக மூச்சுவிட முடியாமல் தவித்தார்.

கூச்சலிட்டு டாக்டர்கள், நர்ஸ்களை அழைத்தும் யாரும் வராத நிலையில் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார். மேலும் மற்றொரு பெண் நோயாளியும் மூச்சுத்திணறலால் படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடித்தார்.

அவருக்கும் உதவி செய்ய யாரும் இல்லை. டாக்டர்கள், நர்ஸ்கள் காலையில் மட்டும் மருந்து, மாத்திரைகளை வழங்கிவிட்டு சென்று விடுகிறார்கள்.

அதன்பிறகு கண்டுகொள்வதில்லை. கொரோனாவால் பாதித்து இறந்தவர் சடலத்தை பல மணி நேரமாக அதே இடத்தில் விட்டு விடுவதோடு சடலத்தை எடுத்துச்சென்ற பிறகு அதே படுக்கையை சுத்தம் செய்யாமல் வேறு ஒரு நோயாளிக்கு வழங்குகின்றனர்.



அதேபோல், கழிவறைகள் மிக மோசமாக உள்ளது. இப்பிரச்னைகள் தீர முதல்வர் ஜெகன்மோகன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வாலிபர் வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குப்பை வண்டியில் நோயாளிகள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் ஜராஜப்புபேட்டா என்ற நகரத்தில் உள்ள 3 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் நகராட்சி அதிகாரிகள், குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது.


.

மூலக்கதை