ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்குதேசம் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல்...!! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

தினகரன்  தினகரன்
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்குதேசம் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல்...!! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

குண்டூர்:  ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்தவர்களுக்கிடையே தேர்தல் காரணமாக கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலான மண்டல, ஜில்லா மற்றும் கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தலை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஊரடங்கானது தொடர்ந்து அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டே வந்தது. இதனால் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியினர் கடந்த மார்ச் மாதத்திலேயே, எதிர் கட்சி தரப்பில் போட்டியிட்டவர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமலும், மனு தாக்களை வாபஸ் பெற வைத்தும் பல்வேறு தொந்தரவுகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதும் இந்த சம்பவமானது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது. அதாவது ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுக்கலூர்பேட்டை என்ற கிராமத்தில் மண்டல உறுப்பினராக திவ்யா போட்டியிட்டுள்ளார். இவர் எதிர் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு ஆளும் கட்சியினர் இவரை வற்புறுத்தியுள்ளனர். இதற்கு திவ்யா மறுப்பு தெரிவித்த நிலையில் இன்று காலை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து திவ்யா மற்றும் அவரது உறவினர்களிடையே கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. இந்த மோதலில் திவ்யா உட்பட அவரது உறவினர்களான 10க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து காயமடைந்தவர்களை சிலுக்கலூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  இதனைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை