குடியுரிமை சட்டத்திருத்த விதிகள் என்னென்ன?: ஜனாதிபதி ஒப்புதல் தந்து 6 மாதமாகியும் தயாராகவில்லை..கூடுதலாக 3 மாத அவகாசம் கோரும் மத்திய உள்துறை..!!

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்த விதிகள் என்னென்ன?: ஜனாதிபதி ஒப்புதல் தந்து 6 மாதமாகியும் தயாராகவில்லை..கூடுதலாக 3 மாத அவகாசம் கோரும் மத்திய உள்துறை..!!

டெல்லி: குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து 6 மாதத்திற்கு மேலாகிவிட்ட  நிலையில், குடியுரிமை திருத்த சட்ட விதிகளை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதிலிருந்து 6 மாதத்திற்குள் அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு உள்துறை அமைச்சகம் மூலம் அந்த துறையின் நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்பது அரசியல் சாசன விதி. ஆனால் தற்போது வரை குடியுரிமை திருத்த சட்ட விதிகள் உருவாக்கப்படவில்லை. இதனால் உள்துறை அமைச்சகம் சார்பில் 3 மாதங்கள் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2014ம் ஆண்டு 31ம் தேதி வரை பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும்  ஆப்கனிஸ்தானில் இருந்து வந்த மைனாரிட்டிகள் இந்தியாவில் வாழ்ந்து வந்தால் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதை இந்த மசோதா வலியுறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் 12ல் இந்த சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். பார்லிமென்ட் விதிகளின்படி, ஒரு சட்டம் நிறைவேறியதில் இருந்து, ஆறு மாதங்களுக்குள், அதற்கான விதிகள் வெளியிடப்பட வேண்டும் அல்லது கூடுதல் அவகாசம் கோர வேண்டும். அதன்படி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிகளை உருவாக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் துணை சட்ட விதிகளுக்கான பார்லிமென்ட் நிலைக் குழுவுக்கு, உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தினரின் குடியுரிமையை பறிப்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மூலக்கதை