புதிய நிதி இயல்பு நிலையைஉருவாக்கி இருக்கிறது கொரோனாவின் தாக்கம்

தினமலர்  தினமலர்
புதிய நிதி இயல்பு நிலையைஉருவாக்கி இருக்கிறது கொரோனாவின் தாக்கம்

எல்லாமே மாறியிருக்கும் சூழலில், நிதி வாழ்க்கையிலும் புதிய இயல்பு நிலை உருவாகியிருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப உத்திகளை வகுப்பது அவசியம்.

வீட்டில் இருந்தே பணி செய்வது, ஆன் லைனில் வகுப்புகள், மூடப்பட்டிருக்கும் திரையரங்குகள், தள்ளி வைக்கப்படும் பயணங்கள் என கொரோனாவின் தாக்கம், அன்றாட வாழ்க்கையை தலைகீழாக மாற்றியிருக்கிறது. பழைய நிலை எப்போது திரும்பும் என தெரியாத சூழலில், கட்டுப்பாடுகள் கொண்ட வாழ்க்கை, புதிய இயல்பு நிலையை உருவாக்கி இருக்கிறது. நம் செயல்முறையும் இதற்கேற்ப மாறியிருக்கிறது.

இதே போலவே, நம் நிதி வாழ்க்கையிலும் புதிய இயல்பு நிலை உருவாகி இருப்பதை உணர்ந்து செயல்படுவது அவசியமாகிறது.பொருளாதார நோக்கில் நிச்சயமற்ற சூழல், சேமிப்பின் அவசியத்தை அழுத்தமாக புரிய வைத்திருக்கிறது. வீண் செலவுகளை தவிர்த்து, அத்தியாவசிய தேவைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.


இந்த சூழலில், நிதி இலக்குகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, தேவையான மாற்றங்களை செய்வதும் அவசியமாகிறது.நிதி இலக்குகள்பொதுவாக, சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பதற்றமடையாமல், நீண்ட கால இலக்குகளை தொடர வேண்டும் என்பதே நிதி உலகில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழல், நீண்ட கால இலக்குகளுக்கான உத்தி சரியாக இருக்கிறதா என பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கியிருக்கிறது.


முதலீடுகளின் செயல்பாடு மற்றும் அவை தரும் பலன்களை ஆய்வு செய்து, இலக்குகளை அடைய மாற்றம் தேவை எனில், அவற்றை மேற்கொள்ள வேண்டும்.கொரோனா, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைதியாக இருப்பது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஓய்வு காலத்திற்கான சேமிப்பு சரியான திசையில் அமைந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.


காப்பீடு முக்கியம்

சொந்த வீடு வாங்குவது அல்லது பிள்ளைகளின் உயர் கல்வி போன்ற பெரிய செலவுகளை உடனடியாக மேற்கொள்ள இருந்தால், அவற்றுக்கான திட்டமிடலை ஆய்வு செய்ய வேண்டும். பணி இழப்பு அல்லது ஊதிய குறைப்பு ஏற்படும் நிலை இருந்தால், அதற்கேற்ப மாற்றங்களை செய்ய வேண்டும்.


பொது முடக்க சூழல், பலருக்கும் பண முடையை ஏற்படுத்தி, செலவுகளை கட்டுப்படுத்த வைத்திருக்கிறது. வீண் செலவுகளை கட்டுப்படுத்துவதை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதோடு, பொழுதுபோக்கு போன்ற வழக்கமான செலவுகளை தள்ளிப் போடுவதால், மிச்சமாகும் பணத்தை சரியான முறையில் சேமித்து முதலீடு செய்ய வேண்டும்.


கடன் தவணையை செலுத்துவது, முதலீட்டிற்கான மாத தவணைகளை தொடர்வதில் கவனம் செலுத்த வேண்டும். நிதி நெருக்கடி இருந்தால், நடுவே சில காலம் முதலீடு தவணையை நிறுத்தி, கையில் ரொக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், அதன் இருப்பிட தேர்வு குறித்து தங்கள் முன்னுரிமைகளை மறு பரிசீலனை செய்வது நல்லது. வீடு நகர்ப்புற பகுதியில் அமைந்து இருப்பது வசதியானது எனும் எண்ணம் மாறத் துவங்கியிருக்கிறது.


அதே நேரத்தில் காப்பீட்டின் முக்கியம் அதிகமாக உணரப்படுகிறது. போதுமான ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவசர கால நிதிக்கான தொகையை அதிகரிப்பது, பெரிய செலவுகளை தள்ளிப்போடுவது, ஆடம்பரங்களை முற்றிலும் தவிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், தற்போதைய புதிய நிதி இயல்பை எதிர்கொள்ள உதவும்.

மூலக்கதை