நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சக்தியும், புத்துணர்ச்சியும் அளிக்க காலை சாப்பாடு வழங்க வேண்டும்: புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சக்தியும், புத்துணர்ச்சியும் அளிக்க காலை சாப்பாடு வழங்க வேண்டும்: புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை

புதுடெல்லி: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவும் வழங்கும்படி புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கப்படுவது போல், மாணவர்களுக்கு  காலை உணவும் வழங்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  காலை உணவு தொடர்பாக புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊட்டசத்து குறைபாடு அல்லது உடல்நிலை சரியில்லாத சூழலில் இருக்கும் மாணவர்களால் கல்வியில் ஆர்வம் செலுத்த முடியாது. எனவே, குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் மனவள குறைபாடுகளானது சரி செய்யப்பட வேண்டும். ஆரோக்கியமான உணவும், மனவள ஆலோசனைகளும் நன்கு பயிற்சி பெற்ற சமூக சேவையாளர்கள், ஆலோசகர்கள் மூலமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும், சத்தான காலை உணவானது அறிவாற்றல் திறனை அதிகரிப்பதோடு, அதன் மூலமாக மாணவர்களின் கல்வியில் கவனத்தை செலுத்த உதவும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே, மாணவர்களுக்கு எளிமையான, ஆனால், புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய சத்தான காலை உணவு வழங்கப்பட வேண்டும்.* சூடான காலை உணவு வழங்க முடியாத இடங்களில் எளிதான, சத்து மிகுந்த வேர்கடலை அல்லது கொண்டை கடலை வெல்லம் கலந்து வழங்கப்பட வேண்டும். * உள்ளூரில் கிடைக்கும் பழங்களும் வழங்கப்பட வேண்டும்.* மாணவர்கள் 100 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனரா என கண்டறிய சீரான உடல் பரிசோதனைகள் அவசியமாகும். * இவற்றை கண்காணிக்கும் வகையில் மருத்துவ பரிசோதனை அட்டைகள் வழங்கப்பட வேண்டும். * L5 வயதுக்கு முன்னர் ஒவ்வொரு குழந்தையும் பாலர் வகுப்புக்களுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.* நாடு முழுவதும் 11.59 கோடி அரசு பள்ளி மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர்.* மேலும், 16 லட்சம் சமையலர்கள், உதவியாளர்களும் இதன் மூலமாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர். * தேசிய கல்விக் கொள்கை 1986ம் ஆண்டு முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது.* 34 ஆண்டுகள் பழமையான இந்த தேசிய கல்வி கொள்கை, தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. * சர்ச்சைக்குரிய இந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மூலக்கதை