திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாக சொப்னா கும்பல், 21 முறை தங்கம் கடத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் சொப்னாவுக்கு பெரும் செல்வாக்கு உண்டு.

துணைதூதர் மற்றும் அட்டாஷே என்று அழைக்கப்படும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களையும் சொப்னா தனது கைக்குள் வைத்திருந்தார். இதை தெரிந்துதான் சந்தீப் நாயர், சரித்குமார், ரமீஸ், பைசல் பரீத் ஆகியோருக்கு தூதரக பார்சலில் தங்கம் கடத்தும் தைரியம் வந்தது.

சொப்னாவும் அதற்கு உடன்பட்டார். கடந்த ஆண்டு ஜூனில்தான் கடத்தல் தொடங்கி உள்ளது.

முதலில் தங்களது திட்டம் பலிக்குமா? என்பதை பரிசோதிக்க, உணவு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கிய 2 மாதிரி பார்சல்களை அனுப்பி வைத்தனர். அவை எந்த சிக்கலும் இல்லாமல் கைக்கு வந்து சேர்ந்துள்ளன.

அதன் பிறகே அவர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. தொடர்ந்து கடந்த ஜூன் வரை 21 பார்சல்களில் தங்கம் கடத்தி உள்ளனர்.



கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் மிக அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பார்சலிலும் அதிகபட்சமாக 3. 50 கிலோ தங்கம் கடத்தியதாக சுங்க இலாகாவிடம் இந்த கும்பல் கூறியுள்ளது.

ஆனால் அதை சுங்க இலாகா நம்பவில்லை. ஒவ்வொரு பார்சலிலும் குறைந்தது 5 முதல் 10 கிலோ வரை கடத்தியிருக்கலாம் என்று சுங்க இலாகா கருதுகிறது.

கடந்த ஜூன் 24ம் தேதி வந்த பார்சலில் 16. 50 கிலோவும், 28ம் தேதி 25 கிலோவும் இவர்கள் கடத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் தங்கத்தின் எடையை அதிகரித்து வந்துள்ளனர்.

கடைசியாக ஜூன் 30ம் தேதி சிக்கிய பார்சலில் மிக அதிகமாக 30 கிலோ தங்கத்தை கடத்தி உள்ளனர். இதுவரை எவ்வளவு தங்கம் கடத்தினோம் என்று சொப்னா கும்பல் விசாரணை அமைப்புகளிடம் கூறவில்லை.

ஒவ்வொருவரும் வேறுவேறு கணக்கை கூறுகின்றனர். இதனால் உண்மையாக கடத்தப்பட்ட தங்கத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று சுங்க இலாகா கருதுகிறது.



சொப்னா கும்பல் ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை குழப்பும் வகையிலேயே வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர். தங்கம் கடத்தல் குறித்து அட்டாஷே ராஷித் காமிஸ் அல்சலாமிக்கு தெரியும் எனவும், ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தும் போது 1,500 டாலர் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து அட்டாஷேயிடம் விசாரித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும். அவர் துபாயில் இருப்பதாலும், மத்திய அரசின் அனுமதியில்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று தெரியும் என்பதாலும் தான் சொப்னா கும்பல் தங்களை குழப்புவதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதற்கிடையே தங்கத்தின் அளவை குறைத்து கூறி அட்டேஷேவை தாங்கள் ஏமாற்றியதாகவும் சந்தீப் நாயர் சுங்க இலாகா அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் கடத்தப்படும் தங்கத்தின் உண்மையான எடையை கூறினால், கூடுதல் பணம் கேட்பார் என்பதால் 3 கிலோ தங்கம் கடத்துவதாக அட்டேஷேயிடம் கூறியதாக சந்தீப் நாயர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கும் பலமடங்கு அதிகமாக பலமுறை தங்கம் கடத்தி உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

.

மூலக்கதை