கரை சேருமா ஜி.எஸ்.டி., கப்பல்?

தினமலர்  தினமலர்
கரை சேருமா ஜி.எஸ்.டி., கப்பல்?

தமிழகம் உட்பட, பல முன்னணி மாநிலங்கள், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியில் தமக்கான பங்கை, மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. கொரோனா காலத்தில் இந்தத் தொகை கிடைக்குமானால், அது மாநிலங்களின் செலவுகளுக்கு பயன்படும்.


இந்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், ஜி.எஸ்.டி., விஷயத்தில் வழங்கியுள்ள ஓர் ஆலோசனை, எல்லா மாநிலங்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. என்ன நடந்தது? கொஞ்சம் கொசுவர்த்திச் சுருளை சுற்ற விடுவோம். பழைய கதை சொன்னால் தான், இன்றைய நிலைமை புரியும்.இழப்புகடந்த, 2017ல் மத்திய – மாநில அரசுகளில் பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி., என்ற ஒற்றை வரி அமல்படுத்தப்பட்டது.


இதில், பல்வேறு வரி அடுக்குகள் இருந்தன. அப்போது ஒத்துக் கொள்ளப்பட்ட ஓர் அம்சம் முக்கியமானது. ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படும் போது, மாநிலங்களுக்கு வருவாயில் இழப்பு ஏற்படுமானால், அதை மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையாக ஈடுசெய்யும்.ஒவ்வோர் ஆண்டும் வரி வருவாய், 14 சதவீத அளவுக்கு உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், மாநிலங்களின் இழப்பை ஈடுசெய்வதற்கு, ஒரு வழிமுறையும் உருவாக்கப்பட்டது.


அதன்படி, 28 சதவீத வரி அடுக்கில் உள்ள ஆடம்பரப் பொருட்களின் மீது, ஒரு தீர்வை விதிக்கப்படும். இந்தத் தீர்வையின் மூலம் சேகரமாகும் தொகைக்கு, ‘காம்பன்சேஷன் நிதி’ என்று பெயர். இந்தத் தொகையில் இருந்து தான், மாநிலங்களின் இழப்பு ஈடுசெய்யப்படும் என்று, அப்போது முடிவானது.அதன்படி, காம்பன்சேஷன் தீர்வை மூலம் சேகரமான தொகை, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

கடந்த ஆகஸ்டு முதலே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. காம்பன்சேஷன் நிதியில் போதுமான பணம் இல்லை. அதனால், மாநிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையைத் தருவதில் தாமதம் ஏற்பட்டது.இந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசம். அதுவும் கொரோனா வந்த பின், ஜி.எஸ்.டி., வருவாயே சரிந்து போனது. அதற்கு மேல், ஆடம்பரப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியடைய, அதிலிருந்து திரட்டப்பட்ட காம்பன்சேஷன் தீர்வையின் அளவும் சுருங்கிப் போனது.


கடந்த ஆண்டு, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் திரட்டப்பட்ட காப்பன்சேஷன் தீர்வை, 24 ஆயிரத்து, 613 கோடி ரூபாய். ஆனால், இந்த ஆண்டு, அதே காலகட்டத்தில் திரட்டப்பட்டதோ, 14 ஆயிரத்து, 685 கோடி ரூபாய் மட்டுமே. இந்த நிலையில் பற்றாக்குறை அளவு உயர்ந்து கொண்டே போனது.மேலும், 2019 – 20 நிதியாண்டில், அதிக நிலுவைத் தொகை உள்ள முதல் ஐந்து மாநிலங்கள் இவை: மஹாராஷ்டிரா, 19 ஆயிரத்து, 233 கோடி; கர்நாடகா, 18 ஆயிரத்து, 628 கோடி; குஜராத், 14 ஆயிரத்து, 801 கோடி; தமிழகம், 12,305 கோடி, பஞ்சாப், 12 ஆயிரத்து, 305 கோடி.இப்போது தான் பிரச்னையே ஆரம்பித்தது.


எங்கிருந்து பணத்தைக் கொடுப்பது?


காம்பன்சேஷன் நிதியில் பணமில்லை. தொடர்ச்சியாக இந்த விவாதம் ஓடிக் கொண்டு இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம், மார்ச் நிலுவைத் தொகையான 14 ஆயிரம் கோடி ரூபாயை நிதி அமைச்சகம், மாநிலங்களுக்குக் கொடுத்தது. அதாவது, கடந்த நிதியாண்டில் மொத்தம், 1.65 லட்சம் கோடி ரூபாயை, நிதி அமைச்சகம், மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது. முந்தைய இரண்டு ஆண்டுகளில் சேகரிக்கப்பட்டு, கொஞ்சம் மிச்சமிருந்த காம்பன்சேஷன் நிதியில் இருந்து வழித்து எடுத்து, கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை பெருகினால் தான், காம்பன்சேஷன் தீர்வை சேகரமாகும். இன்றைக்கு இருக்கும் சூழலில், இதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியானால், தங்கள் செலவுகளுக்காக ஏங்கிக் காத்திருக்கும் மாநிலங்களுக்கு என்ன பதில் சொல்வது?இங்கே தான் நம் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் ஓர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்.


மத்திய அரசு, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று எந்தக் கடமையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ஜி.எஸ்.டி., இழப்பீட்டை ஈடுசெய்ய ஓர் உத்தியையும் பரிந்துரைத்திருக்கிறார். அதாவது, மாநிலங்கள் தங்கள் எதிர்கால ஜி.எஸ்.டி., வருவாயை கருத்தில் கொண்டு, சந்தையில் இருந்து கடன்கள் பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று, ஜி.எஸ்.டி., கவுன்சிலில் மாநிலங்கள் கோரலாம் என்று சொல்லியிருக்கிறார் வேணுகோபால்.

இதற்கு முன்னர் ஒரு விஷயம் நடந்துவிட்டது. நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் முன், மத்திய நிதித்துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே ஒரு கருத்தை தெரிவித்துவிட்டார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட பங்கீட்டின் படி, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., நிதி ஒதுக்கீடு செய்யும் நிலையில் மத்திய அரசு இல்லை என்பதே அவரது கருத்து. இவ்விரண்டு கருத்துகளும், நம் அடிப்படை நம்பிக்கைகளையே ஆட்டம் காண வைத்து விட்டன.

கொரோனா என்பது யாரும் எதிர்பாராத ஒன்று தான். அதன் பாதிப்பு எவ்வளவு துாரம் விரிவடையும் என்பது தெரியவில்லை. ஆனால் மத்திய அரசு, தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாறலாமா? மாநிலத்தின் பங்கைக் கொடுப்பது தங்கள் கடமை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என, பல்வேறு மாநில நிதி அமைச்சர்களும், துணை முதல்வர்களும் கொதிக்கின்றனர்.

காம்பன்சேஷன் தீர்வை என்ற பொதியில் இருந்து தான், மாநிலங்களில் நிதி இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பது, 2017ல் எடுக்கப்பட்ட முடிவு. அதை இப்போது சீர்திருத்தலாமே? அதை விட்டுவிட்டு, இரண்டு மூன்று ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, ஜி.எஸ்.டி.,யின் வரம்புக்குள் கூடுதல் பொருட்களைக் கொண்டு வருவது. கீழ் அடுக்குகளில் இருக்கும் பொருட்களை, ஜி.எஸ்.டி.,யின் மேல் அடுக்குகளுக்கு நகர்த்துவது இன்னொன்று அல்லது சந்தையில் இருந்து கடன் வாங்குவது.சந்தையில் யார் கடன் வாங்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி.


ஜி.எஸ்.டி., கவுன்சில் என்பது ஓர் அமைப்புதானே அன்றி, அது செபி மாதிரியோ, இதர அமைப்புகள் மாதிரியோ, கடன் வாங்கும் உரிமை பெற்றது அல்ல. அது கடன் வாங்க, மத்திய அரசுக்கு பரிந்துரை தான் செய்ய முடியும். மாநிலங்களைக் கடன் வாங்கச் சொல்வது, இன்னொரு பெரிய நெருக்கடி. ஏனெனில், ஏற்கனவே ஒரு கணக்குச் சொல்லப்படுகிறது.


முந்தைய வருவாயில், 65 சதவீத அளவுக்குத் தான் இனிமே ஜி.எஸ்.டி., வருவாய் இருக்கும் என்று கணிக்கின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் வருவாயைக் கணக்கிட்டு, அதற்கு இணையாக கடன் வாங்க வேண்டும் என்றால், இரண்டு விஷயங்கள் ஏற்படும். ஒன்று, மாநிலங்களில் நிதி நிலைமை படுபாதாளத்துக்குத் தள்ளப்படும்.வட்டிக்கு மேல் வட்டி செலுத்தி ஓட்டாண்டியாகப் போய் விடுவர். இரண்டு, மீளவே முடியாத கடன்காரர்களாக ஆகி விடுவர்.

பிரச்னை

இன்றைய நிலையில், பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி.,யை உயர்த்துவது என்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகவே இருக்கும்.அதனால், உண்மையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் என்ன செய்யும் என்ற கேள்வி, அனைவர் மனதிலும் நிழலாடிக் கொண்டு இருக்கிறது.சரி இவ்வளவு துாரம் வந்துவிட்டோம். நம் தமிழகத்துக்கு இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும் பார்த்துவிடுவோம்.


திட்டமிடப்பட்ட செலவுகள், கொரோனாவுக்காக ஏற்படும் செலவுகள் முதற்கொண்டு பல செலவுகளுக்கு பணம் இருக்காது. தமிழகம் செலவுகளை இன்னும் இழுத்துப் பிடிக்கும். கடன் சுமை மென்மெலும் அதிகரிக்கும். வளர்ச்சிப் பணிகள் சுணங்கிப் போகும். இன்னொரு பக்கம் செலவுகளை ஈடுசெய்ய, மதுக்கடைகளை நம்பியிருக்கும் போக்கு பெரிதும் அதிகரிக்கும்.


உண்மையில், கே.கே. வேணுகோபால் தெரிவித்த ஆலோசனையை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும். இந்த இடர் காலத்திலும் மொத்த பொறுப்பையும் மத்திய அரசு தன் தோளில் சுமக்க வேண்டும். மத்திய அரசை நம்பித்தான் மாநிலங்கள் உள்ளன. ஜூலை மாதமே கூட்டப்பட வேண்டிய ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும்.


அத்தனை பிரச்னைகளையும் மாநில நிதி அமைச்சர்களோடு கலந்து பேசி, மாற்று வழிகள் என்னென்ன என்பதை தெளிவாக வரையறை செய்ய வேண்டும். நிதிப் பற்றாக்குறை, வருவாய் இல்லை என்பது மத்திய அரசின் பிரச்னை அல்ல. அது, கொரோனாவின் கோரமான கொடை. தங்களுடைய சுயகவுரவ பிரச்னையாக இதை மத்திய அரசு கருதாமல், அனைவரோடும் கலந்து பேசி, இதற்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்.

ஜி.எஸ்.டி., என்பது மிகப்பெரிய கனவுக் கப்பல். உலக நாடுகள் பலவற்றிலும் அது மிகவும் சுகமாக மிதந்து கொண்டிருக்கிறது. நாமும் அதேபோல் நகர வேண்டும் என்றால், அதில் கேப்டன் மட்டும் தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதில்லை. உள்ளே வேலை செய்யும் அடிமட்டத் தொழிலாளர் வரை கருத்து சொல்லி, பிரச்னையைத் தீர்ப்பதற்கு வழி காண வேண்டும். ஜி.எஸ்.டி., கப்பல், ‘டைட்டானிக்’காக மாறாமல் இருப்பது, மத்திய அரசின் கையில் தான் இருக்கிறது.
ஆர்.வெங்கடேஷ்
[email protected]

9841053881

மூலக்கதை