96 வயதில் பல்கலை பட்டம்; விடா முயற்சியுடன் சாதித்த தாத்தா

தினமலர்  தினமலர்
96 வயதில் பல்கலை பட்டம்; விடா முயற்சியுடன் சாதித்த தாத்தா

ரோம்: இத்தாலியில் 96 வயதான முதியவர் ஒருவர் பல்கலைக்கழகப் பட்டம் வாங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படிப்பதற்கு வயது தடையில்லை. லட்சியத்தை அடைய விடா முயற்சி போதும். இந்த இரண்டும் சேர்ந்து வயதான காலத்திலும் பட்டம் பெற வேண்டும் என்ற ஒரே குறியுடன் 96 வயது முதியவர் ஒருவர் இத்தாலியில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுள்ளார். கியூசெப் பட்டர்னோ என்ற 96 வயது முதியவர், சிறு வயது முதலி வறுமை, போர் என பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது கடற்படையில் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன்பிறகு ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தற்போது தன்னைவிட சுமார் 70 வயது குறைவான மாணவர்களுடன் சேர்ந்து படித்து, பட்டம் பெற்றுள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது இத்தாலியில் முதுமையான வயதில் பல்கலைக்கழக பட்டம் வாங்கியவராக மாறியுள்ளார். இது குறித்து கியூசெப் பட்டர்னோ கூறியதாவது: மற்றவர்கள் போல் நானும் சாதாரண நபர் தான். எனது 90 வயதில் வரலாறு மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற நினைத்து கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் என்னால் படிப்பை தொடர முடியவில்லை. அதன்பிறகு 2017ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தேன்.

மூன்று வருட பட்டம் பெறுவதற்கு சற்று தாமதமாகிவிட்டது என்பதை நான் புரிந்து கொண்டாலும், இதனை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. அறிவு என்பது நாம் தினமும் எடுத்துச் செல்லும் சூட்கேஸ் போன்றது. அது ஒரு புதையல். புத்தகங்கள் எழுத வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதேபோல் நூல்களை படித்து ஆராய்ச்சி செய்யவும் திட்டமிட்டுள்ளேன் இவ்வாறு அவர் கூறினார். வயது எவ்வளவு ஆனாலும், தன்னுடைய லட்சியத்தை அடைந்த முதிய பட்டதாரிக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை