20 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு ரத்து; தாய் ‘பீர்’ குடிச்சிட்டு தூங்கியது குற்றமல்ல..! குழந்தை இறந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

தினகரன்  தினகரன்
20 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு ரத்து; தாய் ‘பீர்’ குடிச்சிட்டு தூங்கியது குற்றமல்ல..! குழந்தை இறந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்காவில் பீர் குடித்துவிட்டு தாய் தூங்கிய நிலையில், சில மணி நேரங்களுக்கு பிறகு குழந்தை படுக்கையிலேயே உயிரிழந்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கடந்த 2013ல் அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் மூரியல் மாரிசன் என்ற பெண் பேஸ்புக் பார்த்துக்கொண்டு இரவு பீர் அருந்தியுள்ளார். பின்பு தனது 4 மாத மகளுக்கு ‘டயபர்’களை மாற்றிவிட்டு தாய்ப்பால் கொடுத்துவிட்டு குழந்தையின் அருகிலேயே தூங்கிவிட்டார். பின்பு காலையில் கண் விழித்து பார்த்தபோது தன்னுடைய மகள் பேச்சு மூச்சில்லாமல் உதட்டில் நீலம் படிந்து உயிரிழந்த நிலையில் கிடந்தது. இவ்விகாரம் தொடர்பாக போலீசார் மூரியல் மாரிசன் மீது வழக்குபதிந்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. போலீசாரின் குற்றச்சாட்டில், ‘குற்றஞ்சாட்டப்பட்ட மூரியல் மாரிசன் மீது குழந்தையின் அருகிலேயே அதிகளவு குடித்துவிட்டு உறங்கியதால், குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு மூரியல் மாரிசனே காரணம்’ எனக் கூறினர். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், மூரியல் மாரிசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்து. மனமுடைந்த அந்த பெண், தனக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடர்ந்து மற்றொரு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த மேரிலாண்ட் நீதிமன்ற நீதிபதிகள், ‘குழந்தை இறந்த சம்பவம் அஜாக்கிரதை காரணமாக மரணம் நிகழ்ந்ததாகவே பார்க்கப்பட வேண்டும். திட்டமிட்டு ஒரு தாய் குழந்தையை கொலை செய்யவில்லை. குழந்தையுடன் தாய் உறங்குவது ஒன்றும் கொலைக் குற்றமல்ல. மேலும் ஒரு ‘பீர்’ குடித்துவிட்டு 4 மாத குழந்தையின் அருகில் தூங்குவதன் மூலம் குழந்தையை சாகடிக்க முடியாது. எனவே இவ்வழக்கில் கீழ்நீதிமன்ற தண்டனை ரத்து செய்யப்பட்டு, மூரியல் மாரிசன் விடுதலை செய்யப்படுகிறார்’ என்று தீர்ப்பளித்தனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தகவல்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 3,500 குழந்தைகள் தூக்கத்தில் இறப்புகள் நடந்துள்ளன. அவற்றில் திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி, தற்செயலான மூச்சுத் திணறல் மற்றும் அறியப்படாத காரணங்களால் ஏற்படுகின்ற இறப்புகளாக உள்ளதாக தெரிவிக்கிறது.

மூலக்கதை