நாய்கள் நடிப்பில் உருவாகும் வாலாட்டி

தினமலர்  தினமலர்
நாய்கள் நடிப்பில் உருவாகும் வாலாட்டி

மனிதர்களை வைத்து படம் எடுப்பது போரடித்து விட்டதாலோ என்னவோ நாய்களை மையப்படுத்தி உருவாகும் 'வாலாட்டி' என்கிற படத்தை தயாரித்து வருகிறார் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு. விஜய்யின் தெறி படத்தை கேரளாவில் வெளியிட்டவர் இவர்தான்.. முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து வரும் இவர், இந்திய சினிமாவில் முதன்முறை புதிய முயற்சியாக நாய்களை கதாபாத்திரங்களாக வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை தேவன் என்பவர் இயக்குகிறார்.

நான்கு நாய்கள் இதில் நடிக்க இருக்கின்றன. இதில் என்ன ஹைலைட் என்றால் நாய்களை நடிக்க வைத்து காட்சிகளை நிஜமாகவே படமாக்க போகிறார்களே தவிர, இதில் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை கொஞ்சமும் பயன்படுத்த போவது இல்லையாம். இதற்காக கடந்த ஒரு வருடமாக ஒரு ஏக்கர் நிலம் ஒன்றில் தேவையான வசதிகளை செய்து, நாய்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து, மொத்த கதையையும் ரிகர்சல் பார்த்து விட்டார்களாம். அவைகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே கதாபாத்திர பெயர்களையும் சூட்டி அப்படியே அழைக்க ஆரம்பித்துவிட்டதால் நாய்களும் நடிப்பதற்கு நன்கு பழக்கமாகி விட்டனவாம். போனால் போகிறதென்று சில மனிதர்களும் இந்தப்படத்தில் நடிக்கிறார்களாம். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது..

மூலக்கதை