புதிய தயாரிப்பாளர் சங்கம் - பழைய தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
புதிய தயாரிப்பாளர் சங்கம்  பழைய தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக பல வருடங்களுக்கு முன்பு உருவான சங்கம்தான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்தில் மொத்தமாக 4000 தயாரிப்பாளர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

திரைப்பட சங்கங்களில் மிக முக்கியமான சங்கமாக இந்த சங்கம் இருக்கிறது. ஆனால், கடந்த சில வருடங்களாகவே இந்த சங்கத்தை சரியாக செயல்பட விடாமல் சிலர் சர்ச்சைகளை எழுப்பி வருகிறார்கள். இதனால், தற்போது படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்கள் வருவதாக அவர்கள் நினைத்தனர். அதனால், தற்போது படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து புதிதாக ஒரு சங்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி ஒரு சங்கம் உருவாவதற்கு பழைய தயாரிப்பாளர்கள், மூத்த தயாரிப்பாளர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சங்கத்தில் வாக்களிக்கும் உரிமை பெற்ற சுமார் 1300 தயாரிப்பாளர்களும், வாக்களிக்க உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களாக சுமார் 3500 பேரும் இருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அறிவுரைப்படி 1979ம் ஆண்டு ஆரம்பமான தயாரிப்பாளர் சங்கத்தை பல சீனியர் தயாரிப்பாளர்கள் கட்டிக் காப்பாற்றி வந்தனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கனெ தனியாக டிரஸ்ட் ஒன்றும் உள்ளது. அதன் மூலம் தயாரிப்பாளர்களின் நலனுக்கான சிற்சில உதவிகளும் கிடைத்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சங்கத்தை தற்போது பிரிக்க நினைத்து போட்டியாக இன்னொரு சங்கத்தை உருவாக்குவது தேவையற்றது என சில சீனியர் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் இருக்கும் வாட்சப் குழுக்களில் கருத்துக்களைச் சொல்லி வருகிறார்களாம்.

புதிதாக சங்கம் ஆரம்பித்தாலும் அந்த சங்கத்திலும் படம் தயாரிக்க வரும் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகச் சேர முடியும். ஒரு படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெற, தற்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியவவை மூலம்தான் ஒரு தயாரிப்பாளர் கடிதம் பெற்று விண்ணப்பிக்க முடியும். அந்த உரிமையையும் புதிய சங்கம் பெற்றாக வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பிக்கப் போவதன் காரணம் என்ன என்பது குறித்து திரையுலகில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அதற்கான முறையான அறிவிப்பு வரும்போதுதான் அது என்ன என்பது தெரிய வரும்.

மூலக்கதை