கேரள தங்கம் கடத்தல் வழக்கு: விசாரணை அமைப்புகளை குழப்பும் சொப்னா கும்பல்?

தினகரன்  தினகரன்
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: விசாரணை அமைப்புகளை குழப்பும் சொப்னா கும்பல்?

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் தூதரக அட்டாஷே பணம் வாங்கியதாக சொப்னா கும்பல் கூறுவது வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இருக்கலாம் என என்ஐஏ மற்றும் சுங்க இலாகா கருதுகிறது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா மற்றும் சந்தீப் நாயரை என்ஐஏ 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இதன்பிறகு இருவரையும் சுங்க இலாகாவினரும் 5 நாட்கள் காவலில் எடுத்தனர். இந்த விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. என்ஐஏ மற்றும் சுங்க இலாகா விசாரணையில், தங்கம் கடத்தலுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரக அட்டாஷே என் அழைக்கப்படும் ராஷித் காமிஸ் அல்சலாமி உடந்தையாக இருந்தார் என இருவரும் கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தும்ேபாது, திருவனந்தபுரத்தில் உள்ள பணம் எக்ஸ்சேஞ்ச் ஏஜென்ட் வழியாக 1,500 டாலர் கொடுத்ததாக சொப்னா கூறினார். இதையடுத்து அந்த ஏஜென்டிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வழக்கில் தொடர்பு இருப்பதாக ஒருவர் மீது கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தால், அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உறுதி செய்ய வேண்டும். ஆனால் அட்டாஷே ராஷித் காமிஸ் அல்சலாமி மீது இருவரும் புகார் கூறி இருந்தாலும், வெளியுறவுத்துறை சட்டப்படி அவரிடம் இந்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துவது முடியாத காரியமாகும். அதுபோல அட்டாஷேயிடம் விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால், வழக்கு விசாரணையின்போது அது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்திடம் அனுமதி கேட்டால் விசாரணை தாமதமாக வாய்ப்பு உள்ளது. உபா சட்டப்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிடும். தீவிரவாத குழுக்களின் தலையீடு இருப்பதாக கருதப்படும் இந்த வழக்கில், தங்களது சொந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளை இந்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் அனுமதிக்க வாய்ப்பு இல்லை. இந்தியாவால் அவர்களை விசாரணைக்கு ஆஜராக கட்டாயப்படுத்தவும் முடியாது. இதை தெரிந்து ைவத்துதான் சொப்னா கும்பல், அமீரக தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என கூறுவதாக சுங்க இலாகா மற்றும் என்ஐஏ கருதுகிறது. ஆனால் ஐக்கிய அரபு அமீரக தூதரக சீல்கள், அரசு முத்திரைகள், தூதரக லட்டர்-பேடுகள் ஆகியவற்றை போலியாக இக்கும்பல் தயாரித்துள்ளது. இதை இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக விசாரணை அமைப்புகள் பயன்படுத்த தீர்மானித்துள்ளன. சொப்னாவுக்கு திருவனந்தபுரம், கொச்சி உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான வங்கி கணக்குகளும், ரகசிய லாக்கர்களும் உள்ளதை என்ஐஏ கண்டுபிடித்தது. இதையடுத்து கடந்த வாரம் ஒருசில லாக்கர்களை திறந்து பரிசோதித்தபோது அதில் ஒரு கோடிக்கு மேல் கத்தைகத்தையாக பணமும், ஒரு கிலோவுக்கு அதிகமான தங்க நகைகளும் இருந்தன. இது தொடர்பாக நடந்த விசாரணையில், ஒருசில லாக்கர்கள் ஐஎஸ்ஐ அதிகாரி சிவசங்கரின் ஆடிட்டர் மற்றும் சொப்னாவின் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆடிட்டரை என்ஐஏ அதிகாரிகள் கொச்சிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிவசங்கர் கூறியதால்தான் சொப்னாவுக்கு லாக்கர் எடுக்க உதவியதாக தெரிவித்துள்ளார். ஆடிட்டர் கூறியது உண்மையாக இருந்தால், இந்த வழக்கில் இது முக்கிய ஆதாரமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையே திருவனந்தபுரத்தில் உள்ள ஆடிட்டரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.ேமலும் கடந்த 4 ஆண்டுகளில் சிவசங்கரின் வருமானம், பண பரிமாற்றம் குறித்தும் ஆடிட்டரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸை நேற்றிரவு என்ஐஏ அதிகாரிகள் திருவனந்தபுரம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் கோவளத்தில் தங்கியிருந்த ஓட்டல், திருவனந்தபுரத்தில் சொப்னா தங்கியிருந்த பிளாட்டுக்கும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மூலக்கதை