இந்தியாவில் கற்றதை பிற நாடுகளிலும் பின்பற்றுவோம்: கூகுள், பேஸ்புக்

தினமலர்  தினமலர்
இந்தியாவில் கற்றதை பிற நாடுகளிலும் பின்பற்றுவோம்: கூகுள், பேஸ்புக்

புதுடில்லி: 'பேஸ்புக், கூகுள்' ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில், 'ரிலையன்ஸ் ஜியோ'வில் முதலீடு செய்திருக்கும் நிலையில், அவை, இது போன்ற வணிக மாதிரியை பிற நாடுகளிலும் பின்பற்ற இருப்பதாக தெரிவித்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனங்கள், தங்களுடைய முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, உலகின் மிகப் பெரிய இணைய நுகர்வோர் தளங்களில் ஒன்றாக இருக்கும், இந்திய சந்தையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளன.

பெரிய வாய்ப்பு

இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கூறியதாவது: இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான சிறு கடைகள், சிறு வணிகங்கள் ஆகியவற்றுடன், 'வாட்ஸ் ஆப்' மூலம் வர்த்தகம் செய்வதற்காக கிடைத்த வாய்ப்பு உற்சாகமளிப்பதாக இருக்கிறது. இந்தியாவில், ஜியோவுடன் சேர்ந்து இதை நாங்கள் நிரூபித்தவுடன், அங்கு கற்றதை பிற நாடுகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். நமக்கு இந்தியா ஒரு பெரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை. மிக வேகமாக வளரக்கூடிய ஒரு வணிக வாய்ப்பாகும் இது.

டிஜிட்டல் பொருளாதாரம்

இந்தியாவில் ஏராளமானோர், வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர். அங்கிருக்கும் சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர்கள், வாட்ஸ் ஆப் மூலம் பொருட்களை வாங்கவும்; விற்கவும் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதே போல், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான, 'ஆல்பபெட்' நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பில், நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை கூறியதாவது: வளர்ந்து வரும் இந்தியாவின், 'டிஜிட்டல்' பொருளாதாரத்தை துரிதப்படுத்துவதில் பங்கேற்கும் வகையில், அடுத்த, 10 ஆண்டுகளில் இந்தியாவில், 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய இருக்கிறோம்.அதன்படி முதலில், 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறுவதற்கு உதவ, ஜியோவுடன் பணியாற்றுவோம்.இவ்வாறு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

மூலக்கதை