விசா நடைமுறை கடுமையாக்கப்படும்: அமெரிக்க குடியேற்றத் துறை அறிவிப்பு

தினமலர்  தினமலர்
விசா நடைமுறை கடுமையாக்கப்படும்: அமெரிக்க குடியேற்றத் துறை அறிவிப்பு

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும், 'எச் -- 1பி' உள்ளிட்ட இதர வேலை வாய்ப்பு விசாக்கள் பெறுவதில், துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்காக, தேர்வு முறை கடுமையாக்கப்பட்டுள்ளது' என, அந்நாட்டு குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.

மென்பொருள் இன்ஜினியர்கள் உள்ளிட்ட, தனிச்சிறப்பு வாய்ந்த துறை நிபுணர்கள், அமெரிக்கா சென்று பணியாற்ற, எச் - -1பி விசா வழங்கப்படுகிறது. இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை, எச் -- 1பி விசா வாயிலாக, அமெரிக்கா அனுப்பி வைக்கின்றன. இந்த விசாவை நம்பித்தான், பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், 'அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் பரவலால், கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

'அவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வேலை பார்க்க வருவோருக்கான விசாக்கள், இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும்' என, அமெரிக்க அரசு, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க தொழிலாளர்களின் நலனை மனதில் கொண்டு, விசா வழங்குவதில், பல கடுமையான விதிமுறைகள் மற்றும் மாற்றங்களை செய்துள்ளதாக, அமெரிக்க குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, அமெரிக்க குடியேற்ற சேவைகளுக்கான துணை இயக்குனர் ஜோசப் எட்லோ, பார்லி., விசாரணை குழு முன், நேற்று முன்தினம் கூறியதாவது: எச் -- 1பி விசா வழங்க வசூலிக்கப்படும் கட்டணங்கள், அமெரிக்க தொழிலாளர்களை பயிற்றுவிக்க பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

இந்த விசாவுக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். உள்நாட்டு பல்கலைக்கழகங்களில், முதுகலை அல்லது அதற்கு நிகரான மேற்படிப்பு முடித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.பார்லி., குழு அறிவுறுத்தியபடி, நடப்பு நிதியாண்டில், 65 ஆயிரம், எச் -- 1பி விசாக்கள் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதில், முதல், 20 ஆயிரம் விசாக்கள், அமெரிக்க பல்கலையில், உயர் படிப்பு முடித்தவர்களுக்கு வழங்க, முன்னுரிமை அளிக்கப்படும்.நீதித் துறையுடன் இணைந்து, போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பு விசாக்கள் பெறுவதில், துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை